காவிரியில் வெள்ள அபாயத்தை தடுக்க பெருக்கெடுத்து வரும் நீர் இன்று கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது


காவிரியில் வெள்ள அபாயத்தை தடுக்க பெருக்கெடுத்து வரும் நீர் இன்று கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது
x
தினத்தந்தி 24 July 2018 4:30 AM IST (Updated: 24 July 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

வெள்ள அபாயத்தை தடுக்க காவிரி நீர் இன்று கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. கரையோர பகுதி மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

திருச்சி,

5 ஆண்டுகளுக்கு பின்னர் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று எட்டியது. கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு நேற்று இரவு நிலவரப்படி வினாடிக்கு 68 ஆயிரத்து 489 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று முதல் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் காவிரியில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் காவிரியில் வெள்ள அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் திருச்சி ஓயாமரி படித்துறை, கம்பரசம்பேட்டை தடுப்பணையில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் கலெக்டர் ராஜாமணி ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் காவிரி கரையோரத்தில் குடியிருக்கும் மக்கள், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் கூடும் இடமான முக்கொம்பு, கம்பரசம்பேட்டை தடுப்பணை, அம்மா மண்டபம், ஓயாமரி படித்துறை ஆகிய இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் வரும் வெள்ளப்பெருக்கை பார்ப்பதற்கு செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குழந்தைகளை தனியாக ஆற்றில் இறங்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது. சிறிய கவனக்குறைவினால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலை உருவாகும். கொள்ளிடம் கரையோரத்தில் உள்ள மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கரையை கடக்கவோ, தண்ணீரில் இறங்கி குளிக்கவோ வேண்டாம். தொட்டியத்திலிருந்து 25 இடங்கள் அபாயகரமான பகுதியாக கண்டறியப் பட்டுள்ளது. இந்த பகுதியில் வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி, நகராட்சி, தீயணைப்புத்துறை காவல்துறை ஆகிய துறை அலுவலர்கள் மூலம் தொடர்ந்து காவிரியில் வரும் தண்ணீரை கண்காணிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் உத்தரவின்படி நமது மாவட்டத்தில் உள்ள 75 பெரிய ஏரிகளில் காவிரி ஆற்றுநீரை முழுமையாக நிரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று இரவு நிலவரப்படி மாயனூர் தடுப்பணையில் 28 ஆயிரம் கன அடி நீரும், முக்கொம்பு மேலணையில் 18 ஆயிரம் கன அடி நீரும் உள்ளது. காவிரியில் தொடர்ந்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வெள்ள அபாயத்தை தடுக்க இன்று (செவ்வாய்க்கிழமை) கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. 

Next Story