100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை கட்டுவதற்கான தடைகளை நீக்க வேண்டும் கலெக்டரிடம் மனு


100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை கட்டுவதற்கான தடைகளை நீக்க வேண்டும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 24 July 2018 4:15 AM IST (Updated: 24 July 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி பீரங்கி குளத்தெரு அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை கட்டுவதற்கான தடைகளை நீக்க வேண்டும் என்று கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி தலைமையில் அதிகாரிகள் மனுக்களை வாங்கினார்கள்.

அப்போது திருச்சி கோட்டை பகுதி காசிபாளையம், பீரங்கி குளத்தெரு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள், சிவனடியார்கள் வந்து கொடுத்த ஒரு மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

பெரிய கம்மாள தெரு காளிகாபரமேஸ்வரி கோவில் தேவஸ்தானத்தை சேர்ந்த செல்வவிநாயகர் கோவில் பீரங்கி குளத்தெரு அருகே காசி பாளையத்தில் இருந்தது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட பீரங்கிகளை வைத்து வழிபாடு நடத்தி இருக்கிறார்கள். இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் மிகவும் பழுதடைந்ததால் கடந்த 2000-ம் ஆண்டு முழுவதுமாக இடிக்கப்பட்டு விட்டது. பின்னர் இந்த கோவிலை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த கோவிலை கட்டுவதற்கான தடைகளை நீக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

செந்தண்ணீர்புரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் கெட்டுப்போய் விட்டதாக கூறி அதனை பாட்டிலில் நிரப்பி கொண்டு வந்தனர். நிலத்தடி நீரில் மருந்து வாடை வீசுவதால் அதனை குடிப்பதற்கோ, சமையலுக்கோ, துணிகள் துவைப்பதற்கோ பயன்படுத்த முடியவில்லை. மேலும் இந்த நீரில் குளித்தால் தோல் வியாதிகள் ஏற்படுவதால் இந்த தண்ணீரை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.

ஸ்ரீரங்கம் 5-வது வார்டு காவேரி நகரை சேர்ந்த பெண்கள், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்குவதற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர். லால்குடி தாலுகா பெருவளநல்லூர் வடக்கு புது காலனி மக்கள் தங்களுக்கு 1,974-ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் வருவாய்த்துறை ஆவணங்களில் நத்தம் புறம்போக்கு என குறிப்பிடப்பட்டு இருப்பதால் தங்களுக்கு தனித்தனியாக வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிடவேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.

இந்து மக்கள் கட்சியினர் மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார் தலைமையில் வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் டெல்லியில் கோவணத்துடன் போராட்டம் நடத்திய விவசாயிகளை கண்டுபிடித்து அவர்களை விவசாயம் செய்ய வலியுறுத்த வேண்டும், அவர்கள் பயன்படுத்திய மண்டைஓடு மற்றும் எலும்புகளை பறிமுதல் செய்ய உத்தரவிடவேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.

சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் அதன் இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்ரீராம் மற்றும் நிர்வாகிகள் வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், இந்து கோவில்களில் அகல்விளக்கு, கார்த்திகை விளக்கு, மண் விளக்கு, லட்சுமி விளக்கு ஏற்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் அணையா விளக்கு என்ற பெயரில் அகண்ட விளக்கில் மட்டும் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற முடியாமலும், தீபம் ஏற்றி பரிகாரம் செய்ய முடியாமலும் தவிக்கிறார்கள். எனவே கோவில்களில் விளக்கு ஏற்றுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவர் தங்க சண்முக சுந்தரம் நெல்லுக்கு வழங்கப்பட்ட ஆதார விலையினால் பலன் ஏதும் இல்லை. இதனால் விவசாயிகளுக்கு தாலி கூட மிஞ்சாது என்பதை வலியுறுத்தும் வகையில் கையில் தாலி கயிறை பிடித்தபடி வந்து மனு கொடுத்தார். 

Next Story