பண்டைய வழக்கப்படி சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கக்கூடாது ஜீயர் பேட்டி


பண்டைய வழக்கப்படி சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கக்கூடாது ஜீயர் பேட்டி
x
தினத்தந்தி 23 July 2018 11:00 PM GMT (Updated: 23 July 2018 9:15 PM GMT)

பண்டைய வழக்கப்படி சபரிமலை அய்யப்பன் கோவில் பெண்களை அனுமதிக்கக்கூடாது. சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பதற்கு நியாயமான விஷயங்கள் உள்ளது. அந்த நடைமுறையை கடைப்பிடிப்பதில் மனித உரிமை மீறல் இல்லையென மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் கூறினார்.

சுந்தரக்கோட்டை,

சபரிமலை அய்யப்பன் கோவில் என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கோவிலாகும். இந்த கோவிலில் பெண்களை ஆண்டாண்டு காலமாக அனுமதிப்பதில்லை. அதற்கு காரணம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடுங்குளிர் நிலவும் காலகட்டமாகும். அப்போது அந்த கோவிலுக்கு சென்று வரும் பக்தர்கள் ஆங்காங்கே மலைப்பிரதேசங்களில் தங்கும் நிலை ஏற்படும்.

பெண்களையும் அனுமதித்தால் அவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். மேலும் ஒரு சிலரால், அய்யப்பனுக்காக பக்தர்கள் இருக்கும் விரதங்களுக்கு பங்கம் ஏற்பட்டு விடும். அதனாலேயே நம் முன்னோர்கள் இந்த கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க மறுத்துள்ளனர். இது வேதாகமங்களிலும் சொல்லப்பட்டு இருக்கிறது.

எனவே சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிக்காதது மனித உரிமை மீறலாக கருதக்கூடாது. இது ஒரு மத நம்பிக்கை. இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் கையாண்டு வருகிறது. இந்த நிலையில் வேதங்களில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளையும் நாம் பின்பற்றியாக வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் மசூதிகளில் தொழுகைக்கு முஸ்லிம் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதை கேள்வி கேட்க யாரும் முன்வருவதில்லை. அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி வேண்டும் என்பதை மட்டும் ஏன் கேட்கிறார்கள். இதில் ஆன்மிகம் கலாசாரம் என்பதை மீறி சுய விளம்பரத்திற்காக இதுபோன்ற விஷயங்களை பயன்படுத்துகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story