அட்டவணை இன இயக்கத்தினர் புதுவையில் 28–ந் தேதி உண்ணாவிரத போராட்டம்
புதுச்சேரியில் நேற்று அட்டவணை இன இயக்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
புதுச்சேரி,
புதுச்சேரி அட்டவணை இன இயக்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலை செகா ஆர்ட் கேலரியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் காத்தமுத்து முன்னிலை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறையின் முன்னாள் இயக்குனர் அன்பழகன், பத்திரப்பதிவு அலுவலக முன்னாள் பதிவாளர் ராஜரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிர்வாகிகள் புண்ணியகோடி, விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
2016–ல் புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட்ட இலவச கல்வி திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட இன மாணவர்கள் இதுவரை வாங்கிய கல்விக்கடனை முழுவதும் ரத்து செய்ய வேண்டும். புதுவையில் வீடு இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு உடனடியாக இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28–ந் தேதி மறைமலை அடிகள் சாலையில் உள்ள சுதேசி மில் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.