களக்காட்டில் வீரவணக்க பொதுக்கூட்டம்: ஒடுக்கப்பட்டுள்ள மக்கள் உரிமைகளை வென்றெடுக்க ஒரே அணியில் திரள வேண்டும்
ஒடுக்கப்பட்டுள்ள மக்கள் உரிமைகளை வென்றெடுக்க ஒரே அணியில் திரள வேண்டும் என களக்காட்டில் நடந்த வீரவணக்க பொதுக்கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசினார்.
களக்காடு,
ஒடுக்கப்பட்டுள்ள மக்கள் உரிமைகளை வென்றெடுக்க ஒரே அணியில் திரள வேண்டும் என களக்காட்டில் நடந்த வீரவணக்க பொதுக்கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசினார்.
வீரவணக்க பொதுக்கூட்டம்நெல்லை மாவட்டம் களக்காடு தேரடி திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் வீரவணக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமை தாங்கினார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதி செயலாளர் ஈழவளவன், முருகன், ரவிக்குமார், ரவிநாத், சுபாஷ், சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பு வரவேற்றார்.
கூட்டத்தில் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் மீதான போலீசாரின் தாக்குதலும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது பொதுமக்கள் மீதான போலீசார் தாக்குதலும் ஒன்றுதான். இரண்டுமே தனியார் நிறுவனங்களை பாதுகாக்க அப்பாவி மக்கள் மீது திட்டமிட்டு போலீசாரால் நடத்தப்பட்ட அடக்குமுறையாகும். 18 ஆண்டுகளுக்கு முன்பு சம்பளத்தை உயர்த்தி தரக்கோரி மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் நடத்திய ஊர்வலத்தில் போலீசாரால் 17 பேரும், தூத்துக்குடி சம்பவத்தில் 13 பேரும் போலீசாரால் கொல்லப்பட்டனர்.
ஒரே அணியில் திரள வேண்டும்இந்தியா முழுவதும் வருவாய்த்துறை, போலீஸ், நீதித்துறையினர் தலித் மக்களுக்கு விரோதமான உணர்வு கொண்டுள்ளனர். போலீசார் தலித் மக்கள் கொடுக்கும் புகார்களை வாங்குவதில்லை. முன்பு ஏழை மக்களுக்கு 5 செண்ட் நிலம் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு செண்ட் கூட வழங்கப்படுவதில்லை.
தமிழகத்தில் அரசியல் ஆதாயத்துக்காகவும், அச்சுறுத்துவதற்காகவும், மிரட்டுவதற்காகவும் தான் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நண்பர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை முதல்வரை மிரட்டுவதற்காகவே நடத்தப்பட்டுள்ளது. இது மோடிக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைகளை வென்றெடுக்க ஒரே அணியில் திரள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட நெறியாளர் தமிழினியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். போலீசார் தாக்குதலில் பலியான மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முடிவில், நகர செயலாளர் செல்வா நன்றி கூறினார். முன்னதாக, களக்காடு பகுதியில் தொல்.திருமாவளவன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.