பா.ம.க. நகர செயலாளரை வெட்டிய வழக்கு: குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு


பா.ம.க. நகர செயலாளரை வெட்டிய வழக்கு: குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு
x
தினத்தந்தி 24 July 2018 10:45 PM GMT (Updated: 24 July 2018 7:27 PM GMT)

குடியாத்தத்தில் பா.ம.க. நகர செயலாளரை அரிவாளால் வெட்டிய வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம்,

குடியாத்தத்தில் நேற்று முன்தினம் பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் சவுந்தர் என்கிற சவுந்தர்ராஜன் (வயது 38) என்பவரை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த சவுந்தர் வேலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யக்கோரி பா.ம.க. மாநில துணைத்தலைவர் என்.டி.சண்முகம், மாவட்ட செயலாளர் ஜி.கே.ரவி, மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் ஜி.சுரேஷ், மாநில இளைஞரணி துணை செயலாளர் குமார், மாவட்ட அமைப்பு செயலாளர் பாலாஜி உள்ளிட்டோர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனிடம் மனு அளித்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோர் உத்தரவின்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் ஆகியோர் அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு அருகே உள்ள தெருக்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும், செல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story