மானாமதுரை பகுதியில் ஆறு, கண்மாய்களை தொடர்ந்து ஓடைகளிலும் மணல் திருட்டு, பொதுமக்கள் குற்றச்சாட்டு
மானாமதுரை பகுதியில் ஆறு, கண்மாய்களை தொடர்ந்து நீர்வரத்து ஓடைகளில் அதிகாரிகள் உடந்தையுடன் மணல் திருட்டு நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மானாமதுரை,
மானாமதுரை பகுதியில் உள்ள வைகை ஆறு, கண்மாய் உள்ளிட்டவற்றில் சமீபகாலமாக மணல் திருட்டு என்பது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. வைகை ஆற்றில் விடிய, விடிய நடைபெறும் மணல் கொள்ளையால் ஆறு பாழ்பட்டு வருவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டது. இதற்கிடையில் கண்மாய்களையும் மணல் திருடர்கள் விட்டுவைக்கவில்லை. அங்குள்ள சவடு மணலை தாராளமாக அள்ளி வருகின்றனர். இதனால் கண்மாய்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தற்போது நீர்வரத்து ஓடை, கால்வாய்களிலும் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. அதுவும் அதிகாரிகள் உடந்தையுடன் நடப்பது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
மானாமதுரை பகுதியில் கட்டிக்குளம், குவளைவேலி, கீழப்பசலை, செய்களத்தூர், மிளகனூர் உள்ளிட்ட கிராம கண்மாய்களுக்கு பாசன கால்வாய் உள்ளது. வைகை ஆற்றில் நீர் திறக்கப்படும் போது இந்த கால்வாய்கள் வழியாக கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வது வழக்கம். ஒவ்வொரு கண்மாய் நிரம்பியதும், மறுகால் பாய்ந்து ஓடைகள் வழியாக அடுத்த கிராம கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல வழியுண்டு. கடந்த 5 ஆண்டுகளாக வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் கண்மாய்கள் வறண்டு காணப்படுகின்றன. கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் நீர்வரத்து ஓடைகளிலும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. இவற்றின் மறைவில் டிராக்டர்கள் மூலம் மணல் திருட்டு நடைபெறுகிறது. மேலப்பசலை நீர்வரத்து ஓடையில் கடந்த 15 நாட்களாக டிராக்டர்கள் மூலம் சட்டவிரோதமாக மணல் அள்ளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை வருவாய்த்துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
வைகை ஆற்று மணலை விட ஓடைகளில் கிடைக்கும் மணல் தரமானதாக இருப்பதால் பலரும் ஓடைகளில் மணல் அள்ளி வருகின்றனர். இதனால் வைகை ஆற்றில் நீர்வரத்து காலங்களில் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லாமல் மணல் திருடப்பட்ட பள்ளங்களில் தேங்க வாய்ப்புள்ளது. அதிகாரிகள் உடந்தையுடன் இந்த மணல் திருட்டு நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மணல் திருட்டை தட்டி கேட்பவர்களை கும்பல்கள் ஆயுதங்களுடன் மிரட்டுவதால் கிராமமக்கள் பலரும் அச்சத்துடன் உள்ளனர். மேலும் மணல் அள்ளிச் செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் விபத்துகளும் நடைபெறுகிறது. எனவே மணல் திருட்டை தடுக்கவும், அதில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.