கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாய தொழிலாளர்கள் போராட்டம்


கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாய தொழிலாளர்கள் போராட்டம்
x

100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் பணி வழங்கக்கோரி, தேனி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாய தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

தேனி,

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் 100 நாட்கள் வேலை திட்டத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், முழுமையான சம்பளமான ரூ.224 கொடுக்க வேண்டும், மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், தொகுப்பு வீடு கட்டுதல், பண்ணை குட்டை அமைத்தல் போன்ற வேலைகளை சிலருக்கு மட்டும் கொடுப்பதை கைவிட வேண்டும், பேரூராட்சி பகுதிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

போராட்டத்தின் போது, தாங்கள் அனைவரும் மனு கொடுக்க வந்துள்ளதாகவும், மனுவை கலெக்டர் நேரில் வந்து பெற்றுச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியும் முற்றுகையிட்டனர். சுமார் 1½ மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தை தொடர்ந்து நூற்றுக்கணக்கான விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒன்றாக சேர்த்து, மாவட்ட நேர்முக உதவியாளர் (பொது) பொறுப்பு வகிக்கும் தங்கவேலிடம் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் அளித்தனர். அதன்பிறகு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story