சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் தேரோட்டம் நாளை, தவசுக்காட்சி நடக்கிறது
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) தவசுக்காட்சி நடக்கிறது.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) தவசுக்காட்சி நடக்கிறது.
தேரோட்டம்தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் ஆடித்தவசு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 27–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி– அம்பாள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
9–ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோமதி அம்பாள் ரதத்திற்கு எழுந்தருளினார். காலை 9.42 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட கலெக்டர் ஷில்பா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் ஆகியோர் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேர் நான்கு ரத வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது.
நாளை,தவசுக்காட்சிதேரோட்டத்தில் நகரசபை ஆணையாளர் தாணுமூர்த்தி, கோமதி அம்பிகை மாதர் சங்க அமைப்பாளர் பட்டமுத்து, திருவாவடுதுறை ஆதீன ஆய்வாளர் சீதாராமன் உள்பட சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா 11–ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மாலை 5 மணிக்கு முதல் தவசுக்காட்சியும், இரவு 9 மணிக்கு 2–ம் தவசுக்காட்சியும் நடைபெற உள்ளது.
ஆடித்தவசு திருவிழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் நகர் பகுதியில் நான்கு புறங்களிலும் தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 200–க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் சிரமமின்றி தவசுக்காட்சியை தரிசனம் செய்ய பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நகரின் பல இடங்களிலும் சமூக அமைப்புகள் சார்பில் அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகிறது.