விற்பனைக்கு டேங்கரில் தண்ணீர் ஏற்றிச்சென்ற டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம்


விற்பனைக்கு டேங்கரில் தண்ணீர் ஏற்றிச்சென்ற டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம்
x
தினத்தந்தி 26 July 2018 3:30 AM IST (Updated: 25 July 2018 6:16 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே தடையை மீறி தனியார் நிலங்களில் ஆழ்குழாய் அமைத்து, தண்ணீரை உறிஞ்சி டேங்கரில் விற்பனைக்காக ஏற்றிச்சென்ற டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே தடையை மீறி தனியார் நிலங்களில் ஆழ்குழாய் அமைத்து, தண்ணீரை உறிஞ்சி டேங்கரில் விற்பனைக்காக ஏற்றிச்சென்ற டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்ணீர் விற்பனைக்கு தடை

கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு மலை அடிவாரத்தில் கெச்சிலாபுரம் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான நிலங்களில் ராட்சத ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, தண்ணீரை உறிஞ்சி டேங்கர் லாரிகள், டிராக்டர்கள் மூலம் கோவில்பட்டியில் உள்ள ஓட்டல்கள், வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்தனர்.

இதனால் கெச்சிலாபுரம் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு தண்ணீரை உறிஞ்சி எடுத்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

டிராக்டர் சிறைபிடிப்பு

இந்த நிலையில் நேற்று காலையில் கெச்சிலாபுரத்தில் உள்ள தனியார் நிலத்தில் இருந்து தண்ணீரை உறிஞ்சி, டேங்கருடன் கூடிய டிராக்டரில் ஏற்றி விற்பனைக்காக கொண்டு சென்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அந்த டிராக்டரை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி தாசில்தார் பரமசிவன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் கூறுகையில், ‘இனிமேல் கெச்சிலாபுரத்தில் யாரும் தண்ணீரை உறிஞ்சி விற்க கூடாது. யாரேனும் தண்ணீரை விற்பனை செய்தால், போலீசார் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தனர். இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட டிராக்டரை பொதுமக்கள் விடுவித்து விட்டு, கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story