சிங்கம்புணரி அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு ரூ.2 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு
சிங்கம்புணரி அருகே அரசினம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே அரசினம்பட்டி காட்டுப்பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடை உள்ள பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிங்கம்புணரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது டாஸ்மாக் கடை அருகே வெளிச்சம் தெரிவதை கண்ட போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் போலீசாரை கண்டதும் காரில் தப்பியோடியது. அவர்களை பிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் முயன்றார். இருப்பினும் தப்பிவிட்டனர். இதனையடுத்து போலீசார் டாஸ்மாக் கடையில் ஆய்வு செய்தனர். அப்போது கடையின் பின்புறம் சுவரில் துளையிட்டு இருப்பதும், மதுபாட்டில்கள் திருடப்பட்டு இருப்பதையும் பார்த்தனர். மேலும் மதுபாட்டில் பெட்டிகள் வெளியே அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. மேலும் திருட்டு கும்பல் கொண்டு வந்த ஆயுதங்களை விட்டுச் சென்றுள்ளனர்.
மதுபாட்டில் திருட்டு குறித்து அறிந்த கடை மேற்பார்வையாளர், கடை பொறுப்பாளர் ராஜேஷ் மற்றும் மேலாளர் விஜயாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வந்த அவர்கள் கடையில் சோதனை மேற்கொண்டபோது ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின்பேரில் சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இதே கடையில் பூட்டை உடைத்து காலவதியான மதுபாட்டில்களை திருடப்பட்ட நிலையில், தற்போது 2–வது முறையாக சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை மர்ம ஆசாமிகள் திருடியுள்ளனர்.