பெட்டிகள் தட்டுப்பாடு, வருவாய் இழப்பு: லால்குடி ‘டெமு’ ரெயில் சேவையை நிறுத்த திட்டம்?


பெட்டிகள் தட்டுப்பாடு, வருவாய் இழப்பு: லால்குடி ‘டெமு’ ரெயில் சேவையை நிறுத்த திட்டம்?
x
தினத்தந்தி 26 July 2018 4:15 AM IST (Updated: 26 July 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

பெட்டிகள் தட்டுப்பாடு மற்றும் வருவாய் இழப்பால் லால்குடி ‘டெமு’ ரெயில் சேவையை நிறுத்த திட்டமிடப்படுவதாக ரெயில்வே வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

திருச்சி,

திருச்சியில் இருந்து லால்குடி இடையே ‘டெமு’ பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் லால்குடியில் இருந்து அதிகாலை 5.45 மணி அளவில் புறப்பட்டு திருச்சிக்கு காலை 6.40 மணி அளவில் வந்தடையும். இதேபோல திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு லால்குடிக்கு மாலை 5.45 மணிக்கு சென்றடையும்.

இந்த நிலையில் பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே வார இரு முறை புதிய ரெயில் சேவை கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இதற்கு லால்குடி ‘டெமு’ ரெயில் பெட்டிகளை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் ஒதுக்கி உள்ளது. இதனால் லால்குடி ‘டெமு’ ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு அதன் பெட்டிகள் பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் லால்குடி ‘டெமு’ ரெயில் சேவையை நிரந்தரமாக நிறுத்த திட்டமிடப்படுவதாக தகவல் பரவி வருகிறது. இது குறித்து ரெயில்வே வட்டாரத்தில் விசாரித்த போது, “லால்குடியில் இருந்து அதிகாலையில் புறப்பட்டு வரும் போது பயணிகள் அதிக அளவில் வருவதில்லை. பாஸ் வைத்துள்ள ரெயில்வே ஊழியர்கள் வருவது வழக்கம். இதேபோல மாலை நேரத்திலும் ரெயில்வே ஊழியர்கள் அதிகம் பயணிப்பது உண்டு. பொதுவான பயணிகளின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கும். இதனால் அந்த ரெயிலில் வருவாய் அதிகமாக இருப்பதில்லை. வருவாய் இழப்பு தான் ஏற்படுவதாக கருதப் படுகிறது. இதற்கிடையில் பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயிலுக்கு இதன் பெட்டிகள் பயன்படுத்தப்படுவதால் திருச்சி-லால்குடி சேவை ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலை நீடிக்கும் போது லால்குடி ‘டெமு’ ரெயில் சேவையை நிரந்தரமாக நிறுத்தி விடலாமா? என ஆலோசனை நடந்து வருகிறது. அதே நேரத்தில் வருவாயை பெருக்க அரியலூர் வரை நீட்டிக்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிய வந்தது.

லால்குடி ‘டெமு’ ரெயில் சேவையை அரியலூர் வரை நீட்டித்தால் பயணிகளுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். திருச்சியில் இருந்து மாலை நேரத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள், அலுவலக பணி முடித்து செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே லால்குடி ‘டெமு’ ரெயிலை அரியலூர் வரை நீட்டிக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story