கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு - த.வெள்ளையன் பேட்டி


கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு - த.வெள்ளையன் பேட்டி
x
தினத்தந்தி 26 July 2018 5:00 AM IST (Updated: 26 July 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

லாரி உரிமையாளர்களின் கோரிக்கை மற்றும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக ஈரோட்டில் பேட்டி அளித்த த.வெள்ளையன் கூறினார்.

ஈரோடு,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் நேற்று ஈரோட்டில் நடந்த சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:–

இந்தியாவில் வணிகர்களுக்கு எதிரான செயல்பாடு அதிகரித்து வருகிறது. ஆன்–லைன் வர்த்தகம், யூக வணிகம், முன்பேர வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு வகையான யுக்திகள் மூலம் சில்லரை வணிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மூலம் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அன்னியர்கள் சில்லரை வர்த்தகத்தை கைப்பற்ற முயற்சித்து வருகிறார்கள். ஒரு காலத்தில் சில்லரை விற்பனைக்கு இந்தியாவுக்கு வந்த அன்னியர்கள் ஆட்சியையே பிடித்து நம்மை அடிமையாக்கினார்கள் என்பது 5–ம் வகுப்பு படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கூட தெரியும். ஆனால், அது தெரியாததுபோன்று ஆட்சியாளர்கள், அன்னிய சில்லரை வணிகர்களை வரவேற்று அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது, உள்நாட்டு சில்லரை வணிகர்களின் கையில் இருந்து வர்த்தகத்தை பிடுங்குவது போன்றதாகும்.

தற்போதைய மத்திய அரசானது மக்களைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாத அரசாக இருக்கிறது. உதாரணமாக தற்போது லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் லாரி உரிமையாளர்களுக்கும் வேலை இழப்பு, நஷ்டம் இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் தாண்டி இந்த போராட்டம் தொடர்கிறது என்றால், அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் அரசு நிர்வாகம் இருக்கிறது. இதுவரை ஒருவரைக்கூட அழைத்து பேசவில்லை. லாரிகள் வேலை நிறுத்தத்தால் பொருட்கள் விலை உயரும். இதனால் சாமானிய மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். அதைப்பற்றி அரசுக்கு அக்கறை இல்லை. பெட்ரோல்–டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். மணல் கொள்ளை, மலை கொள்ளை போன்று நெடுஞ்சாலைகளில் 50 கிலோ மீட்டர்களுக்கு ஒரு சுங்கச்சாவடி வைத்து கட்டண கொள்ளை நடத்தி வருகிறார்கள். இந்த நவீன கொள்ளையை தடுக்க வேண்டும் என்று போராடுகிறார்கள்.

லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முழு ஆதரவை அளிக்கிறது. இதுதொடர்பாக சென்னையில் நாளை (அதாவது இன்று) நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

பொதுவாக போராட்டங்கள் வெற்றி பெறுகிறது. கோரிக்கைகள் வெற்றி பெறுவதில்லை. எனவே இந்த லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் கோரிக்கைகள் வெற்றி பெற வேண்டும். கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைத்தால் போராட்டம் தானாக நிறைவு பெறும்.

இவ்வாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் கூறினார்.


Next Story