6–வது நாளாக தொடரும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம்: 10 ஆயிரம் விசைத்தறிகளில் உற்பத்தி நிறுத்தம்


6–வது நாளாக தொடரும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம்: 10 ஆயிரம் விசைத்தறிகளில் உற்பத்தி நிறுத்தம்
x
தினத்தந்தி 26 July 2018 4:15 AM IST (Updated: 26 July 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் 6–வது நாளாக தொடர்ந்து நடந்தது. இதையொட்டி ஈரோட்டில் 10 ஆயிரம் விசைத்தறிகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

ஈரோடு,

நாடு தழுவிய அளவில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் 6–வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. லாரிகள் ஓடாததால் அத்தியாவசிய பொருட்களை அனுப்ப முடியாமல் போக்குவரத்து முடங்கி உள்ளது.

ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டிற்கு தேவையான காய்கறிகள் சரக்கு ஆட்டோக்கள் போன்ற இலகு ரக வாகனங்களில் கொண்டு வரப்படுகிறது. இதேபோல் ஈரோடு மாநகர் பகுதிக்குள் ஜவுளிகளை அனுப்பி வைக்க மாட்டு வண்டிகளும், சிறிது தூரமான பகுதிகளுக்கு சரக்கு ஆட்டோக்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஜவுளி, மஞ்சள், எண்ணெய் வகைகள் பெரும்பாலும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக இந்த பொருட்கள் அனைத்தும் குடோன்களில் தேங்கி கிடக்கிறது. இதேபோல் மஞ்சள் ஏலத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் மஞ்சளின் வரத்தும் குறைந்து உள்ளது. வியாபாரிகள் வாங்கும் மஞ்சளை தங்களது பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியாததால், மஞ்சள் வியாபாரமும் முடங்கிப்போய் உள்ளது.

போர்வை, ஜமுக்காளம் ஆகியவற்றை வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியாமல் உற்பத்தியாளர்கள் சிரமப்படுகிறார்கள். இந்த பொருட்கள் ஈரோட்டில் ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி உள்ளிட்ட இடங்களில் உள்ள குடோனில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஜவுளி உற்பத்தியை நிறுத்தும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘‘ஈரோட்டில் விசைத்தறி மூலமாக உற்பத்தி செய்யப்படும் துணிகள் ராஜஸ்தான், மராட்டியம், குஜராத் உள்பட பல்வேறு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான துணிகள் லாரிகள் ஓடாததால் அனுப்பி வைக்க முடியாமல் தேக்கம் அடைந்து உள்ளது. இதனால் எங்களது சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி ஈரோடு மாணிக்கம்பாளையம், ராசாம்பாளையம், பெரியவலசு, அசோகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கள் சங்கத்தை சேர்ந்த 10 ஆயிரம் விசைத்தறிகளில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் மற்ற சங்கத்தை சேர்ந்தவர்கள் விசைத்தறியை இயக்கினார்கள். எனவே மீண்டும் வேலை நிறுத்தம் செய்வது தொடர்பாக அனைத்து விசைத்தறி உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்’’, என்றார்.


Next Story