சென்னை நீலாங்கரையில் பண்ணை வீடுகளில் பணம் பறிக்க முயன்ற போலி ஐ.பி.எஸ். அதிகாரி கைது
நீலாங்கரை பண்ணை வீடுகளில் ஆய்வு செய்வதாக கூறி பணம் பறிக்க முயன்ற போலி ஐ.பி.எஸ். அதிகாரியை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உதவியாக இருந்த 4 என்ஜினீயர்களும் பிடிபட்டனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள கானத்தூர் பகுதிக்கு கடந்த பிப்ரவரி மாதம் பாலமணிகண்டன் என்கிற சூரியா (வயது 28) என்பவர் குடும்பத்துடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினார். இவரது சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு. கானத்தூர் குடியிருப்பில் உள்ளவர்களிடம் தான் ஐ.பி.எஸ். அதிகாரி என்று கூறினார்.
அப்பகுதியில் இருப்பவர்களை மிரட்டி பஞ்சாயத்து செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் நீலாங்கரை, கானத்தூர் பகுதிகளில் உள்ள பண்ணை வீடுகளில் ஆய்வு செய்வதாக கூறி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அடையாறு போலீஸ் துணை கமிஷனருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரோந்து பணியில் இருந்த அடையாறு துணை கமிஷனர் சேஷாங் சாய் கானத்தூரில் சுற்றிக்கொண்டிருந்த பாலமணிகண்டனிடம் விசாரித்தார். அப்போது பாலமணிகண்டன் போலி ஐ.பி.எஸ். அதிகாரி என்று கண்டுபிடித்தார். உடனே கானத்தூர் போலீசாருக்கு தகவல் தந்தார்.
கானத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரியாசுதீன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பாலமணிகண்டனையும், அவருடன் இருந்த 4 பேரையும் பிடித்தனர்.
விசாரணையில், பாலமணிகண்டன் என்ஜினீயர் என்றும், பெருங்களத்தூரில் ஒரு தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதும் தெரிந்தது. மற்ற 4 பேரும் பாலமணிகண்டனுக்கு உதவியாக இருந்ததும், அவர்கள் காரப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றும் சேலத்தை சேர்ந்த பிரதீப்குமார்(24), பரத்விக்னேஷ் (23), அவரது தம்பி கட்டிட என்ஜினீயர் ராஜகமல் (22), துரைப்பாக்கத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றும் சேலத்தை சேர்ந்த நாராயணன் (24) என்பதும் தெரிந்தது.
மேலும், பாலமணிகண்டன் 2013–ம் ஆண்டு ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் மகளை இணையதளம் மூலமாக காதலித்து திருமணம் செய்துகொள்ள முயன்றபோது போலி ஐ.பி.எஸ். அதிகாரி என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல் பல பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி நகை, பணம் மோசடி செய்ததாக அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றதும் தெரியவந்தது.
அவர் கானத்தூர் பகுதியில் உள்ள பண்ணை வீடுகளில் மிரட்டி பணம் பறிப்பது, பஞ்சாயத்து செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக தெரியவந்தது. அவர் தனது காரில் போலீஸ் என்று எழுதி அதில் போலீஸ் சீருடையில் வலம் வந்ததும் தெரிந்தது.
அந்த கார் உள்பட 3 கார்கள், போலீஸ் சீருடை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.