ராயபுரத்தில் மாடியில் இருந்து விழுந்து பலியான வாலிபர் அடையாளம் தெரிந்தது
ராயபுரத்தில் மாடியில் இருந்து விழுந்து பலியான வாலிபர் அடையாளம் தெரிந்தது. அவர், மொட்டை மாடியில் தனது காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது தவறி விழுந்து இறந்தது தெரிந்தது.
திருவொற்றியூர்,
சென்னை ராயபுரம் கருமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வீரையன். கடந்த திங்கட்கிழமை இரவு இவரது வீட்டின் 2–வது மாடியில் இருந்து வாலிபர் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
ராயபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான அவர் யார்? என அடையாளம் தெரியாமல் இருந்தது. அவர், திருட வந்தபோது இறந்தாரா? என்ற கோணத்திலும் ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மாடியில் இருந்து கீழே விழுந்து பலியான வாலிபர் அடையாளம் தெரிந்தது. அவர், கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் சின்னப்பா தெருவைச் சேர்ந்த ராஜா என்பவருடைய மகன் மணிகண்டன் (வயது 24) என்பதும், ராயபுரத்தில் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது.
மேலும் அவர், தனது நண்பர் ஆனந்த் என்பவருடன் வீரையன் வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த ரவி என்பவரது வீட்டில் 3–வது மாடியில் குடியிருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு நண்பர்கள் இருவரும் மது அருந்தினர்.
பின்னர் மணிகண்டன் போதையில் தனது காதலியுடன் மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டு இருந்த போது 3–வது மாடியில் இருந்து தவறி விழுந்து உள்ளார். அப்போது வீரையன் வீட்டு பால்கனி மீது விழுந்து, அங்கிருந்து கீழே விழுந்து உயிரிழந்து உள்ளார் என்பது தெரியவந்தது.
ஆனால் இது எதுவுமே தெரியாமல் போதையில் படுத்து தூங்கிய ஆனந்த், மறுநாள் காலை வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது மணிகண்டன் வீடு திரும்பாததால் அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது மணிகண்டன் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்து போனது தெரியவந்தது. பின்னர் ஆனந்த் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.