கயத்தாறு அருகே பட்டப்பகலில் துணிகரம் விவசாயி வீடுபுகுந்து 12 பவுன் நகை–ரூ.20 ஆயிரம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
கயத்தாறு அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கயத்தாறு,
கயத்தாறு அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விவசாயிகயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். விவசாயி. இவருடைய மனைவி கிருஷ்ணம்மாள். இவர்களுடைய மகள் செல்வி (வயது 32). இவருக்கு திருமணமாகி, கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து, தன்னுடைய மகனுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களது வீடு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளது.
இந்த நிலையில் மாரியப்பன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். பின்னர் கிருஷ்ணம்மாள் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் கிருஷ்ணம்மாள் வழக்கம்போல் கூலி வேலைக்கு சென்று விட்டார். செல்வி தன்னுடைய மகனுக்கு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுப்பதற்காக கயத்தாறு தாலுகா அலுவலகத்துக்கு சென்றார்.
கதவை உடைத்து...இவர்களது வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பட்டப்பகலில் கிருஷ்ணம்மாள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள், அங்குள்ள 2 பீரோக்களையும் உடைத்து, அதில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், 3 ஜோடி வெள்ளி கொலுசுகள், ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்த செல்வி, வீட்டில் நகைகள், பணம் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.
போலீஸ் வலைவீச்சுஇதுகுறித்து தகவல் அறிந்ததும், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சப்–இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். திருட்டு நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகைகள், பணத்தை திருடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.