பேச்சுவார்த்தைக்கு அழைப்பு இல்லை: லாரிகள் வேலைநிறுத்தம் தீவிரம் அடைகிறது


பேச்சுவார்த்தைக்கு அழைப்பு இல்லை: லாரிகள் வேலைநிறுத்தம் தீவிரம் அடைகிறது
x
தினத்தந்தி 26 July 2018 11:00 PM GMT (Updated: 26 July 2018 6:45 PM GMT)

லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரவில்லை என்பதால், போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ள சம்மேளன நிர்வாகிகள், இதில் பிரதமர் தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

நாமக்கல்,

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20-ந் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது.

இதன் காரணமாக நாடு முழுவதும் சுமார் 90 லட்சம் சரக்கு வாகனங்கள் இயக்கப்படாததால் தரைவழி போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன.

இந்த தொழிலை நம்பி உள்ள டிரைவர், கிளனர்கள் மட்டுமின்றி பல லட்சம் தொழிலாளர்கள் நேற்று 7-வது நாளாக வேலை இழந்து தவித்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில் சரக்குகளை ஏற்றிச்சென்ற டிரைவர் மற்றும் கிளனர்கள் ஆங்காங்கே பெட்ரோல் விற்பனை நிலையம், பட்டறைகளில் லாரிகளை நிறுத்தி விட்டு எப்போது வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ஒரு சில லாரிகளில் விலைமதிப்புமிக்க சரக்குகள் இருப்பதால், டிரைவர்கள் அவற்றை விட்டுவிட்டு வீட்டுக்கும் செல்ல முடியாமல் இரவு, பகலாக அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு பொழுதை கழித்து வருகின்றனர். ஒருசில டிரைவர்கள் செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வருவதையும் காண முடிகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். நாமக்கல்லில் பெரும்பாலான லாரிகள் இயக்கப்படாததால் சாலைகளும் வெறிச்சோடி கிடக் கின்றன.

இதற்கிடையே நேற்று லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படும் என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் மத்திய அரசு அதிகாரிகள் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுக்கவில்லை. எனவே லாரி உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். அதேநேரத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் தீவிரப்படுத்தவும் முடிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று புதுடெல்லியில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகள் உயர்மட்டக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு அதன் சேர்மன் குல்தரன்சிங் நிருபர்களிடம் கூறும்போது, கோரிக்கைகள் நிறைவேறும் வரை லாரிகள் வேலைநிறுத்தம் தொடரும் என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

வேலைநிறுத்தம் தொடங்கி 7 நாட்கள் ஆகியும் மத்திய அரசு இதுவரை அகில இந்திய போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மத்திய மந்திரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடித்து வருகின்றனர். எனவே பிரதமர் தலையிட்டு வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

தமிழகத்தை பொறுத்தவரையில் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. சென்னை துறைமுக லாரிகளும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்படாது என அதன் நிர்வாகிகள் அறிவித்து உள்ளனர். இன்னும் எங்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

லாரிகள் வேலைநிறுத்தம் நீடித்து வருவதால் நாமக்கல் மண்டலத்தில் சுமார் 10 கோடி முட்டைகள் தேங்கி இருப்பதாக பண்ணையாளர்கள் சிலர் தெரிவித்தனர். எனவே கோழிப்பண்ணையாளர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

இதேபோல் இருப்பில் இருந்த கோழித்தீவனங்கள் பெருமளவில் தீர்ந்து விட்ட நிலையில், கோழித்தீவன மூலப்பொருட்களை கொண்டு வருவதிலும் சிக்கல் நீடித்து வருவதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர். 

Next Story