தேவூர் பகுதியில் கிழக்குகரை கால்வாயில் காவிரி தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி


தேவூர் பகுதியில் கிழக்குகரை கால்வாயில் காவிரி தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 27 July 2018 4:30 AM IST (Updated: 27 July 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

தேவூர் பகுதியில் கிழக்குகரை கால்வாயில் காவிரி தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தேவூர்,

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து, இந்த ஆண்டு கால்வாயில் வழக்கத்துக்கு மாறாக முன்னதாகவே காவிரி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அந்த தண்ணீர் தேவூர் கிழக்குகரை கால்வாய் பகுதிகளான மூலப்பாதை, குள்ளம்பட்டி, கல்லம்பாளையம், தேவூர் பகுதியை வந்தடைந்தது. இதனால் தேவூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த தண்ணீரை வரவேற்கும் வகையில் விவசாயிகள் கால்வாயில் மலர்களை தூவினார்கள்.

மேலும் கால்வாய் தண்ணீரை பயன்படுத்தி நெல் சாகுபடி செய்வதற்காக விவசாய நிலங்களை உழுது தயார்படுத்தி வருகின்றனர். மேலும் விவசாயிகள் ஆந்திர பொன்னி, வெள்ளை பொன்னி, கோ 36 உள்ளிட்ட ரக விதை நெல்களை வாங்கி வந்து, வயல்களில் நெல் நாற்றங்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுமட்டுமின்றி கால்வாயில் ஓடும் தண்ணீரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், உள்ளூர் வாலிபர்கள் ஆனந்தமாக குளித்து மகிழ்கிறார்கள். ஒரு சிலர் தங்களது கால்நடைகளை குளிப்பாட்டி வருகிறார்கள். இந்த தண்ணீர் திறப்பு குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கிழக்குகரை கால்வாயில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் காவிரி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பியதால், வழக்கத்துக்கு மாறாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தற்போது கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் விவசாயிகளுக்கு உகந்ததாக உள்ளது. இதனால் நிலத்தை உழுது தயார்படுத்துவது உள்பட பல்வேறு விவசாய பணிகளை தொடங்கி விட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story