திருப்பூர்-பல்லடம் சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் ரோட்டோர அபாயக்குழி
திருப்பூர்-பல்லடம் சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக ரோட்டோரத்தில் அபாயக்குழி உள்ளது. இதை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் ரோட்டில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாதையில் ஏராளமான பள்ளி, கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. பிரதான சாலையாக இருந்தாலும் ஆங்காங்கே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையிலான ஆபத்துகளும் நிறைந்தே உள்ளன.
இதன்படி இந்த சாலையில் கரையான்புதூர் பகுதியில் சாலையோரத்தில் பெரிய அபாயக்குழி ஒன்று உள்ளது. ரோட்டோரத்தில் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் உள்ள இந்த குழியில் கடந்த பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. இந்த குழி அந்த பகுதி வழியாக செல்லும் பாதசாரிகளையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்துவதாக இருந்து வருகிறது.
இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களாக இருந்தாலும், 4 சக்கர வாகனங்களாக இருந்தாலும் சற்று தடுமாறினாலும் கழிவுநீர் தேங்கியிருக்கும் இந்த குழியில் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. மின்விளக்கு வசதியும் இந்த பகுதியில் இல்லாததால் இந்த குழி அபாய குழியாகவே இருந்து வருகிறது.
இதனால் இந்த குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது சுற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வரும் இந்த அபாயக்குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story