காலத்தை வென்ற கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை


காலத்தை வென்ற கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
x
தினத்தந்தி 27 July 2018 10:16 AM IST (Updated: 27 July 2018 10:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்க் கவிஞர்கள் கூட்டத்தில் முதன்மையானவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

தேசிக விநாயகம் (தேவி) நாகர்கோவிலில் இருந்து நான்கு மைல் தொலைவிலுள்ள தேரூரில் சிவதாணுபிள்ளை ஆதிலெட்சுமி ஆகியோருக்கு 1876-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி பிறந்தார். பள்ளிக்கூடத்தில் மலையாளமே கற்பிக்கப்படும் சூழ்நிலையில், சாந்தலிங்கத் தம்பிரான் என்ற துறவியிடம் தாய்மொழியாம் தமிழைப் பயின்றார். அதன் விளைபயனாய் அழகம்மை ஆசிரியர் விருத்தம் என்ற தலைப்பில் கவி புனைந்தார். சைவ அடியார் பாடல்கள் போல் பொருள் நிறைந்ததாய் அப்பாடல் பாராட்டப்பெற்றது.

இளமைப் பருவத்தில் கோவில் ஒன்றில் கொடை காணச் சென்றார் அந்த இளம் புலவர் தேவி. அங்கே ஆட்டினைப் பலி கொடுக்கும் காட்சியைக் கண்ட தேவிக்கு நெஞ்சம் உருகியது. அந்த உருக்கத்தில் அவர் பாடிய கவிதை மொழிகள், கொல்லாமையை போதித்தன. இருபத்தி நான்கு வயதில் புத்தேரி ஊரில் உமையம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நாகர்கோவில் நகரின் கண்கோட்டாற்றில் தொடக்கப் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். ஆங்கிலப் புலமையும் ஆழ்ந்த தமிழ்ப்புலமையும் அவரைக் கல்லூரி ஆசிரியராகப் பணி உயர்வுக்குக் கொண்டு சேர்த்தன. குழந்தைகளுக்கு ஏற்ற பாடல்கள் தமிழில் பல உண்டு. ஆயினும் பிள்ளைகளே பொருள் புரிந்து பாடும் பாடல்களே தேவியிடம் பிறந்தது. உலகெங்கும் தமிழ்ப்பாட்டைப் படிக்கும் பாடகர்களுக்குச் சொல் அமுதாய் இனிக்கும் எளிமையும் இனிமையும் நிறைந்த மலரும் மாலையும் என்ற கவிதைத் தொகுப்பை கவியின் மணிமொழிகளாக கவிமணி வழங்கினார். அதனால் தமிழறிஞர்கள் குழு அவருக்கு கவிமணி என்ற பட்டத்தை வழங்கியது. அத்தொகுதியில் “அப்பம் திருடின எலி”, “பசுவும் கன்றும்”, “பொம்மைக் கலியாணம்” போன்றவை இளம் பிள்ளைகளுக்கு மகிழ்வைத் தருவதோடு உலக நடைமுறைை-யும் ஊட்டவல்லன. நல்லன நோக்கி அக்குழந்தைகள் நடை செலுத்த வழி சமைத்துக் கொடுப்பன அக்கவிதை கொத்துக்கள்.

இயற்கையின் இனிமை முகத்தை அடையாளம் காட்டும் ஆர்வலர் கவிமணி மலையில் தோன்றும் ஆறு மலைகளையும் கற்கூட்டங்களையும் கடந்து காட்டையும் செடிகொடிகளையும் தாண்டித் தாவித்தாவி சமவெளிக்கு வந்து கடல் தெய்வத்தை நோக்கிச் செல்லுதலை,

‘கல்லும் மலையும் குதித்து வந்தேன்
- பெருங்காடும் செடியும் கடந்து வந்தேன்
எல்லை விரிந்த சமவெளி- எங்கும்நான்
இறங்கி தவழ்ந்து தவழந்து வந்தேன்”

எனக் கடல் சூழ் பூமித்தாயின் பொலிவைப் படம் வரைந்தாற்போல் கவிமணி எழுதித்தந்துள்ளார்.

சமுதாயத்தில் சாதிப் பிரிவு ஒரு கேடாக மேலோங்கி நிற்றலைக் கண்டுணர்ந்து நொந்தவர் கவிமணி. மனிதர் யாவரும் சரி நிகர் என்பதே அக்கவிஞரின் உள்ளக்குரல். நாமெல்லாம் பாரதத்தாய் என்று மேடையில் பேசி விட்டு வாழ்வில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மாந்தர்களை நோக்கி

“கீரியும் பாம்புமாய்ச்
சண்டையிட்டுச் -சாதி
கீழென்றும் மேலொன்றும்
நாட்டி விட்டுப்
பாரதத்தாய் பெற்ற மக்களென்று நிதம்
பல்லவி பாடிப்
பயனெதுவோ??
என கேள்வி கேட்டார் கவிமணி.

கவிமணி எழுதிய ‘மருமக்கள் வழி மான்மியம் சமுதாய விழிப்புணர்வு கவிதை நூல்.

வள்ளுவரின் வாழ்வியல் அறக் கருத்துக்கள் அவர் படைப்புகளில் இரண்டறக் கலந்து கிடக்கின்றன. கவிமணியன் சமத்துவ நோக்கு வள்ளுவம் என்ற ஊற்றில் பெருக்கெடுத்து வந்தது. புத்தரின் உயிர்கள் பால் உள்ள தேசமும் போதனைகளும் கவிமணியிடம் “ஆசிய சோதி”யாகப் பிறந்தது.

சமுதாயத்தை மேல்நிலைக்கு கொண்டு சேர்க்கும் ஆர்வலரான கவிமணி, கள் உண்ணாமை, அகிம்சை ஆகிய அறநெறிகளைக் கவிதை வழி உணர்த்தியுள்ளார்.

மொழிவழி மாநில அமைப்பை முந்தைய நாட்களில் முன்மொழிந்தவர் பண்டித நேரு. அதிகாரத்திற்கு வந்த பிறகு அதற்கு எதிர் முகங்காட்டினார். அதனைக் குறித்துக் கவிமணி, பண்டித நேரு மருமகளாய் நின்று உரிமைக்கு போராடினார். இன்று மாமியாராய் நின்று அதிகாரஞ் செலுத்துகின்றார் என்று கருத்துரை நல்கினார்.

மனித நேயத்தோடு தமிழ்ச் சமுதாயம் உயர்வதற்கு வழிவகுத்த அப்பெரும் புலவர் கவிமணிக்கு, நாட்டுக்கோட்டை நகரத்தார் அண்ணாமலைச் செட்டியார் தலைமையில் செட்டிநாட்டில் பெரும் வரவேற்போடு பாராட்டு விழாவையும் நடத்தினர். பொன்னையும் பொருட்களையும் பரிசாகக் கொடுத்தனர். ஆனால் அப்பரிசுகளைத் தனக்கென்று கொள்ளாமல் திருவனந்தபுரத்தில் தமிழ் வளரத் தந்து நின்றார் கவிமணி. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பெரும் பேராசிரியர் பதவிக்கு அவரை அழைத்தது. அதற்கு நான் ஏற்புடையவன் அல்லன் என தன்னடக்கத்தோடு மறுத்து விட்டார்.

நாகர்கோவிலுக்கு வந்த ராஜாஜி கவிமணியைக் காண விரும்பினார். அவருடன் வந்தவர்கள் கவிமணியை அழைத்து வரப்புறப்பட்டனர். ஆனால் ராஜாஜி, அப்புலவர் பெருந்தகையை நேரில் சென்று காண்பதே மரியாதை எனக் கூறிப் புத்தேரிக்கு வந்து கவிமணியை அரசவைப் புலவராக அமர்த்தி அழகு பார்க்க நினைத்தார். திருவிதாங்கூர் வேற்று மாநிலம் ஆனதால் சட்டச்சிக்கல் எழுந்தது. அதையும் தாண்டி அவரை அப்பணியில் ஈடுபட சென்னை மாகாண அரசு வழி வகுத்தது. ஆயினும் அவ்வழி அப்பதவியைப் பெற மறுத்ததோடு அரசவைப் புலவராய் அமர தன்னிலும் நாமக்கல் கவிஞரே ஏற்றவர் எனப் பரிந்துரை செய்தார் கவிமணி. பிறர் நலன் பேணிய பெருமகனார் கவிமணி எனக் கூறல் தகும்.

பொன்னையும் பொருளையும் நாடாத பொதுநலவாழ்வு அவர் வாழ்வு. இருபதாம் நூற்றாண்டில் கவிஞராகவும் ஆராய்ச்சியாளராகவும் வாழ்ந்து காட்டிய அவர் வரலாறு இருபதின் தமிழக வரலாறு.

இன்று (ஜூலை 27-ந் தேதி) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த தினம். 

-பேராசிரியர், முனைவர் பி.யோகீசுவரன்

Next Story