செண்பகாதேவி அம்மன் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு குற்றாலத்தில் பக்தர்கள் சாலைமறியல்


செண்பகாதேவி அம்மன் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு குற்றாலத்தில் பக்தர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 28 July 2018 2:30 AM IST (Updated: 27 July 2018 8:34 PM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தென்காசி, 

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செண்பகாதேவி அம்மன் கோவில்

நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. இங்கு பவுர்ணமி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று பவுர்ணமி என்பதால் 500–க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வந்தனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள செண்பகாதேவி பகுதிக்கு செல்வதற்கு அனுமதி இல்லை. இதனால் வனத்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த பக்தர்கள் திடீரென குற்றாலம்–ஐந்தருவி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குற்றாலம் வனவர் செந்தில் குமார், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் வனத்துறையின் கட்டுப்பாடுகள் குறித்து பக்தர்களிடம் விளக்கிக் கூறி அவர்களை கோவிலுக்கு செல்ல அனுமதித்தனர். அடுத்த முறை வரும்போது குற்றாலம் கோவில் அலுவலகத்தில் அனுமதி கடிதம் கொடுத்து அனுமதி பெற்று வர வேண்டும் என்று கூறி அனுப்பினார்கள். தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர். இதனால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அனுமதி கிடையாது

இதுகுறித்து வனவர் செந்தில்குமார் கூறியதாவது:–

செண்பகாதேவி அருவி மற்றும் தேனருவிக்கு குளிக்க அனுமதி கிடையாது. இது ஆபத்து நிறைந்த பகுதியாகும். போகும் வழியிலேயே அருவி நீர் விழும் தடாகம் உள்ளது. இங்கு குளிப்பதும் ஆபத்து தான். இதனால் இங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்பவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். இது எங்கள் கடமை. அதைத்தான் விசாரித்துக் கொண்டிருந்தோம். அதற்குள் பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விவரங்களை கூறி அவர்களது விவரங்களை கேட்டு கோவிலுக்கு அனுப்பினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story