சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடிமாத 2-வது வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம்


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடிமாத 2-வது வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 27 July 2018 9:45 PM GMT (Updated: 27 July 2018 8:42 PM GMT)

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடிமாத 2-வது வெள்ளியை முன்னிட்டு நேற்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

சமயபுரம்,

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழ்நாட்டில் பழனிமுருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் போன்ற தினங்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களிலும் அம்மனை தரிசனம் செய்வதற்காகவும், நோய் நொடியில்லாத வாழ்க்கை அமையவும், செல்வ செழிப்போடு குடும்பம் விளங்கவும் வேண்டிக்கொண்டு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் பாத யாத்திரையாகவும், கார்,வேன் போன்ற வாகனங்களிலும், சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

அதன்படி நேற்று ஆடிமாத 2-வது வெள்ளிக்கிழமை என்பதாலும், பவுர்ணமி என்பதாலும், ஆடிமாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதாலும் காலை 5 மணியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமயபுரத்திற்கு வந்தனர். அவர்கள் கட்டண வரிசையிலும் பொது தரிசன வரிசையிலும், நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். மேலும் நெய்தீபங்கள் ஏற்றியும், கோவிலின் நுழைவு வாயிலில் தேங்காய் உடைத்தும், ஏராளமான பெண்கள் வணங்கினர். சில பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து வந்தும், அக்னி சட்டி ஏந்தியும் வந்து அம்மனை பயபக்தி யுடன் வணங்கினர். பக்தர் களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் திருச்சி மற்றும் துறையூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணியிலும், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையில் ஏராளமான போலீசார், ஊர்க்காவல் படையினர் மாரியம்மன் கோவில் பணியாளர்களும் ஈடுபட்டனர்.

இதேபோல் திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் உள்ள சின்னாண்டவர், பெரியாண்டவர் கொடிமரம் முன்பாக பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விசாலாட்சி அம்பாள், துர்க்கை அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றன. இதில் திருப்பைஞ்சீலி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதே போல் திருப்பைஞ்சீலி வனத்தாய் அம்மன் கோவில், இனாம்சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில், போஜீஸ்வரர் கோவில், மாகாளிக்குடி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. முன்னதாக காவிரியாற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு மதுரை காளியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு மதுரைவீரன், கருப்பண்ணசாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. உற்சவ அம்மனுக்கு 108 புடவைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற பவுர்ணமி பூஜையில் தொட்டியம், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Next Story