சொத்துவரி உயர்வை கண்டித்து 9 இடங்களில் தி.மு.க.ஆர்ப்பாட்டம், 4 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் சொத்து வரி உயர்வை கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் 9 இடங்களில் தி.மு.க.சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 4 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர்,
தமிழகத்தில் கடந்த 1998–ம் ஆண்டிற்கு பிறகு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சொத்துவரி உயர்த்தப்படவில்லை. இது தொடர்பான வழக்கில் கடந்த 17–ந்தேதி தீர்ப்பு அளித்த சென்னை ஐகோர்ட்டு 2 வாரங்களுக்குள் சொத்துவரி தொடர்பான முடிவுகளை எடுக்க உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சொத்துவரியை உயர்த்த முடிவு செய்ததற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி உரிமையளர் குடியிருப்புக்கு 50 சதவீதமும், வாடகை குடியிருப்பு களுக்கு 100 சதவீதமும் வரி உயர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது வாடகை குடியிருப்புகளுக்கும் 50 சதவீதமே வரி உயர்வு செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்த சொத்து வரி உயர்வுக்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்வை கண்டித்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தார்.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி அலுவலகம் முன்பு 9 இடங்களில் நேற்று இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அருப்புக்கோட்டையில் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 150 பேர் கலந்து கொண்டனர். காரியாபட்டியில் பேரூராட்சி அலுவலகம் முன்பு தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 125 பேர் கலந்து கொண்டனர். விருதுநகரில் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் 80 பேர் கலந்து கொண்டனர். ராஜபாளையத்தில் நகராட்சி அலுவலகம் முன்பு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 350 பேர் கலந்து கொண்டனர்.
சிவகாசியில் நகர பொறுப்பாளர் காளிராஜ் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 70 பேர் கலந்து கொண்டனர். சாத்தூரில் நகராட்சி அலுவலகம் முன்பு நகர தி.மு.க. செயலாளர் குருசாமி தலைமையில் 120 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர செயலாளர் அய்யாவுபாண்டியன் தலைமையில் 60 பேர் கலந்து கொண்டனர். திருத்தங்கலில் நகராட்சி அலுவலகம் முன்பு நகர பொறுப்பாளர் உதயசூரியன் தலைமையில் 60 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மல்லாங்கிணறு பேரூராட்சி அலுவலகத்துக்கு முன்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 70 பேர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 70 பெண்கள் உள்பட 1080 பேர் கலந்து கொண்டனர்.