அடிக்கடி மது கேட்டு தொந்தரவு செய்ததால் தொழிலாளியை அடித்துக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
அடிக்கடி மது கேட்டு தொந்தரவு செய்ததால் தொழிலாளியை அடித்துக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் குமாரசாமி காலனியை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் (வயது 30), பெயிண்டர். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவரம் விக்னேஷ்குமாரின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் பிரபாகரன் (55) என்ற தொழிலாளிக்கு தெரியவந்தது.
கள்ளத்தொடர்பு விவகாரத்தை வெளியில் சொல்லாமல் இருப்பதற்கு மது வாங்கி கொடுக்க வேண்டும் என்று பிரபாகரன் கூறி விக்னேஷ்குமாரை அடிக்கடி மிரட்டி வந்தார். கள்ளத்தொடர்பு விஷயம் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக விக்னேஷ்குமாரும் பிரபாகரனுக்கு அடிக்கடி மது வாங்கி கொடுத்து வந்தார்.
ஆனால் பிரபாகரன் மது கேட்டு விக்னேஷ்குமாரை அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ்குமார் பிரபாகரனை கொலை செய்ய திட்டமிட்டார். இந்த நிலையில் 25.9.2015 அன்று மதியம் 3 மணியளவில் ஆர்.எஸ்.புரம் லாலி ரோடு அருகில் உள்ள புதர் நிறைந்த பகுதிக்கு பிரபாகரனை மது வாங்கி தருகிறேன் என்று கூறி விக்னேஷ்குமார் அழைத்து சென்றார். அங்கு பிரபாகரனுக்கு மது ஊற்றிக்கொடுத்தார். போதை தலைக்கேறியதும் மயங்கிய பிரபாகரனை விக்னேஷ்குமார் தாக்கினார். பின்னர் அங்கு கிடந்த கற்களை எடுத்து பிரபாகரனின் முகத்தில் பலமாக தாக்கி சிதைத்தார். இதில் பிரபாகரன் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விக்னேஷ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை 3–வது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. தொழிலாளியை அடித்துக்கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விக்னேஷ்குமாருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி சஞ்சய்பாபா தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் சிவக்குமார் ஆஜர் ஆனார்.