காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கியும் குட்டிகளை விட்டு பிரியாமல் 4 நாட்களாக பாசப்போராட்டம் நடத்திய நாய்


காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கியும் குட்டிகளை விட்டு பிரியாமல் 4 நாட்களாக பாசப்போராட்டம் நடத்திய நாய்
x
தினத்தந்தி 29 July 2018 4:15 AM IST (Updated: 29 July 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கியும் குட்டிகளை விட்டு பிரியாமல் 4 நாட்களாக பாசப்போராட்டம் நடத்திய நாயை குட்டிகளுடன் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

மலைக்கோட்டை,

திருச்சி காவிரி ஆறு கடந்த பல மாதங்களாக தண்ணீர் இல்லாததால் வறண்டு கிடந்தது. கரையோரத்தில் பலர் குடிசைகள் அமைத்து குடியிருந்து வந்தனர். மேலும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சஞ்சீவிநகரை அடுத்துள்ள பழைய காவிரி பாலம் அருகில் காவிரி ஆற்றில் ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு நாய் குட்டிகளை ஈன்றது. அந்த குட்டிகளை ஆற்றுக்குள்ளேயே பாதுகாப்பாக பார்த்து வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், திருச்சி காவிரி ஆற்றில் ஆர்ப்பரித்து வந்தது. இதனால், காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக மேடான இடத்துக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. வெள்ளம் வருகிறது என்று எச்சரிக்கப்பட்டதால் கரையோரம் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். ஆனால் 5 அறிவு படைத்த மிருகமான நாய், குட்டிகளுடன் ஆற்றிலேயே ஆகாய தாமரை செடிகள் வளர்ந்த இடத்தில் வசித்து வந்தது.

கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து வந்த தண்ணீர், முக்கொம்பு மேலணையில் இருந்து கல்லணை நோக்கி பாய்ந்து வந்தது. தண்ணீர் பெருக்கெடுத்து வந்ததை கண்ட தாய்நாய், தனது குட்டிகளை வாயால் கவ்வியபடி ஆற்றுக்குள்ளேயே சற்று மேடான பகுதிக்கு வந்தது. அதற்குள் நாய் தஞ்சம் அடைந்த பகுதியை சூழ்ந்து தண்ணீர் பாய்ந்தோடியது.

குட்டிகளை விட்டு பிரிய மனமில்லாமல் நாய் பாசப்போராட்டத்தில் தவித்தது. அதேநேரம் கடந்த 4 நாட்களாக அந்த தாய் நாய், உணவுக்காக கரையை வந்தடையும் நோக்கத்தில் சிறிது தூரம் தண்ணீரில் நீந்தி வருவதும், நீரின் வேகம் அதிகரிப்பால், கரைக்கு செல்லமுடியாமல் குட்டிகள் இருந்த இடத்திற்கே திரும்பி செல்வதுமாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாலத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டவர்களில் ஒருவர், சிலாப் உடைந்து பாலத்தின் ஓட்டை வழியாக கீழே தண்ணீரில் விழுந்தார். அவரை தீயை-ணைப்பு துறையினர் போராடி பத்திரமாக மீட்டனர். இந்த நிலையில் அதே பகுதியில் நாய், ஆற்று தண்ணீருக்குள் சென்று வருவதை, சிலாப் சீர் செய்யும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் ஏட்டு சிவக்குமாரிடம் தெரிவித்தனர்.

அவர் இது பற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறையினர் தக்க உபகரணங்களுடன் அந்த பகுதியை பார்வையிட்டனர். பின்னர் கயிறு கட்டியபடி காவிரி ஆற்றில் இறங்கிய வீரர்கள், தாய் நாயை கையில் தூக்கி கொண்டும், குட்டிகளை பத்திரமாக பிளாஸ்டிக் பெட்டியில் வைத்தும் மீட்டனர்.

பின்னர் அதே பகுதியில் ஓயாமரியில் உள்ள கால பைரவர் கோவிலில் தாய் நாயையும், குட்டிகளையும் இறக்கி விட்டு பால், பிஸ்கட் கொடுத்தனர். தாய் நாய், அவர்களுக்கு நன்றி சொல்வதுபோல வாலை ஆட்டிக்கொண்டு குழைந்தபடி வட்டமடித்தது. இதை பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள் போலீஸ் ஏட்டு சிவக்குமாரையும், தீயணைப்பு துறையினரையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

தீயணைப்பு துறையினர் பொதுமக்களிடம், காவிரியில் தண்ணீர் அதிகமாக வருவதால் சுழல் அதிகமாக உள்ளது. எனவே, யாரும் தண்ணீரில் இறங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். 

Next Story