கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு: திருவாரூர் மாவட்ட தி.மு.க. பிரதிநிதி மாரடைப்பால் சாவு


கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு: திருவாரூர் மாவட்ட தி.மு.க. பிரதிநிதி மாரடைப்பால் சாவு
x
தினத்தந்தி 29 July 2018 4:30 AM IST (Updated: 29 July 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் காட்சியை டி.வி.யில் பார்த்த திருவாரூர் மாவட்ட தி.மு.க. பிரதிநிதி மாரடைப்பால் இறந்தார்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரை சேர்ந்தவர் தமீம் (வயது55). திருவாரூர் மாவட்ட தி.மு.க. பிரதிநிதியான இவர், முத்துப்பேட்டையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். பேரூராட்சி கவுன்சிலராகவும் பதவி வகித்து உள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை நலிவடைந்ததால் தமீம், மிகுந்த மனவேதனைக்கு ஆளானார்.

கடந்த சில நாட்களாக கருணாநிதி உடல் நிலை குறித்து டி.வி.யில் ஒளிபரப்பாகும் செய்திகளை தொடர்ந்து பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதியை அழைத்து செல்லும் காட்சியை டி.வி.யில் பார்த்த தமீம் கதறி அழுதார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறினர். இந்த நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அவரை உடனடியாக முத்துப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து அவரை மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நேற்று அதிகாலை அழைத்து சென்றனர்.

ஆனால் திருச்சி செல்லும் வழியிலேயே தமீம் பரிதாபமாக இறந்தார். அவருடைய உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது. தமீமுக்கு, குரைசி என்ற மனைவியும், ரூபினா என்ற மகளும், ஹாலிது, அசாருதீன் என்ற மகன்களும் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story