கோவில் திருவிழாவில் பிரசாதம் சாப்பிட்ட 200 பேருக்கு வாந்தி-மயக்கம்


கோவில் திருவிழாவில் பிரசாதம் சாப்பிட்ட 200 பேருக்கு வாந்தி-மயக்கம்
x
தினத்தந்தி 29 July 2018 4:45 AM IST (Updated: 29 July 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே கோவில் திருவிழாவில் பிரசாதம் சாப்பிட்ட 200 பேர் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நன்னிலம்,

திருவாரூர் அருகே குவளைக்கால் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா கடந்த 22-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

விழாவின் கடைசி நாளான நேற்றுமுன்தினம் இரவு 7 மணி அளவில் மகாமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜைகளை தொடர்ந்து புளிசாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், சுண்டல் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன. இதை கோவிலுக்கு வந்த அனைவரும் வாங்கி சாப்பிட்டனர்.

இந்த நிலையில் நள்ளிரவில் பிரசாதம் சாப்பிட்ட 200 பேருக்கு திடீரென வாந்தி, வயிற்று போக்கு, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் உமா, மாவட்ட மருத்துவ அதிகாரி செந்தில்குமார், நன்னிலம் தாசில்தார் பரஞ்ஜோதி, நன்னிலம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் திருநாவுக்கரசு, சிவப்பிரகாசம் ஆகியோர் குவளைக்கால் கிராமத்துக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க ஏற்பாடு செய்தனர்.

அதன்படி 7 டாக்டர்களை கொண்ட மருத்துவ குழுவினர் உடனடியாக கிராமத்துக்கு வரவழைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்ட 200 பேருக்கும், அங்கு உள்ள கோவில் திருமண மண்டபத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களில் அப்பகுதியை சேர்ந்த சாந்தி (வயது35), வளர்மதி (30), மோகனா (26), ரவி (55), மகா (5), சவுமியா (16), சாந்தினி (16), புஷ்பா (15) உள்பட 42 பேரை மேல்சிகிச்சைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், நாகை கோபால் எம்.பி., மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், உதவி கலெக்டர் முருகதாஸ், நன்னிலம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் ராம.குணசேகரன், அன்பு ஆகியோர் நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

சம்பவம் குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நேற்றுமுன்தினம் மதியம் சமைக்கப்பட்ட பிரசாதங்களை இரவில் வினியோகம் செய்தது தெரியவந்தது.

வினியோகம் செய்யப்பட்ட பிரசாதங்கள், குடிநீர், பிரசாதங்களை சமைக்க பயன்படுத்தப்பட்ட எண்ணெய் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வுக்கு பின்னரே வாந்தி, மயக்கம் ஏற்பட்டதற்கான காரணங்கள் தெரியவரும். கோவில் திருவிழாவில் பிரசாதம் சாப்பிட்ட 200 பேர் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story