தென்மேற்கு பருவமழை தீவிரம் 14 ஆண்டுகளுக்கு பிறகு அவலாஞ்சி அணை நிரம்புகிறது, மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


தென்மேற்கு பருவமழை தீவிரம் 14 ஆண்டுகளுக்கு பிறகு அவலாஞ்சி அணை நிரம்புகிறது, மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 July 2018 3:30 AM IST (Updated: 29 July 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக 14 ஆண்டுகளுக்கு பிறகு அவலாஞ்சி அணை நிரம்புகிறது. இதையொட்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டம் அணைகள் அதிகமாக கொண்டுள்ள மாவட்டமாக திகழ்கிறது. இங்கு உள்ள அணைகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு, பைக்காரா, சிங்காரா, மாயார், கெத்தை, பரளி, மரவகண்டி, குந்தா உள்ளிட்ட 12 இடங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டிலேயே நீலகிரியில் தான் தண்ணீர் மூலம் நாள் ஒன்றுக்கு 834 மெகாவாட் மின் சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் மின்தேவையை பூர்த்தி செய்வதில் நீலகிரி மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததால் அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து மின் உற்பத்தி பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் முழு கொள்ளவை எட்டி வருகின்றன. இதனால் இனிவரும் காலங்களில் மாவட்டத்தில் மின் உற்பத்திக்கு எந்தவித சிக்கலும் இல்லை. அவலாஞ்சி அணையின் மொத்த கொள்ளளவு 171 அடியாகும்.

இந்த அணையில் தற்போது 168 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையின் முழு கொள்ளளவை எட்ட இன்னும் 3 அடி மட்டுமே இருப்பதால் இந்த அணையை திறக்க மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதையொட்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அவலாஞ்சி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் எம்.ஜி.ஆர். நகர், நேரு நகர், நேரு கண்டி லாரன்ஸ், இன்பசாகர் நகர், எடக்காடு பிக்குலிபாலம் வழியாக செல்லும் ஓடைகள் மூலம் குந்தா அணையை வந்தடையும். இந்த ஓடையின் கரையோரங்களில் இருபுறமும் மேற்கண்ட பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். அவலாஞ்சி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால் அங்கு பயிரிடப்பட்டு உள்ள காய்கறிகள் தண்ணீரில் அடித்து செல்லப்படும் என்பதால் தங்களது தோட்டங்களில் விளைந்துள்ள காய்கறிகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

அவலாஞ்சி அணை கடந்த 2004–ம் ஆண்டு தனது முழு கொள்ளளவை எட்டி இருந்தது. 14 ஆண்டுகளுக்கு பிறகு அவலாஞ்சி அணை தனது முழு கொள்ளவை எட்ட இருப்பதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Related Tags :
Next Story