ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்ட தினகரன், பொதுமக்களிடம் செல்வாக்கு பெற முடியாது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு


ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்ட தினகரன், பொதுமக்களிடம் செல்வாக்கு பெற முடியாது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
x
தினத்தந்தி 29 July 2018 5:30 AM IST (Updated: 29 July 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்ட தினகரன் பொதுமக்களிடம் செல்வாக்கு பெறமுடியாது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

துடியலூர்,

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், துடியலூர் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் கோவை துடியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கோவனூர் துரைசாமி வரவேற்றார்.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., ஏ.கே.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓ.கே.சின்னராஜ், அம்மன் அர்ஜூனன், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசிய தாவது:-

அ.தி.மு.க. 1½ கோடி தொண்டர்களை கொண்டு மிகப்பெரிய இயக்கமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலை உள்பட அனைத்து சாலைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டு தேவையான இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

கோவையில் 4 அரசு கல்லூரிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. நீண்ட நாள் திட்டமான அவினாசி- அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. சென்னை, பெங்களூரு, மும்பை நகரங்கள் போல மெட்ரோ ரெயில் திட்டத்தை கோவைக்கு கொண்டு வர முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம், பல்வேறு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த தொகுதியில் 425 பூத் கமிட்டிகள் அமைக்க வேண்டும். இந்த பூத் கமிட்டிகளை கண்காணிக்க மாவட்ட அளவிலான கமிட்டிகள், ஒன்றிய, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வார்டு வாரியாக பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலிலும் 100 சதவீதம் வெற்றி பெற அனைத்து அ.தி.மு.க. தொண்டர்களும் வீடு வீடாக சென்று அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்ட தினகரன் பொதுமக்களிடம் செல்வாக்கு பெற முடியாது. எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்கள் அ.தி.மு.க.வில் மட்டுமே உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story