மானாமதுரையில் பா.ஜனதா கட்சியினர் கோஷ்டி மோதல்


மானாமதுரையில் பா.ஜனதா கட்சியினர் கோஷ்டி மோதல்
x
தினத்தந்தி 28 July 2018 11:30 PM GMT (Updated: 28 July 2018 8:59 PM GMT)

மானாமதுரையில் கூட்டத்தின் போது பா.ஜனதா கட்சியினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரையொருவர் நாற்காலிகளை வீசி தாக்கிக்கொண்டனர்.

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை பா.ஜனதா பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் நிர்வாகிகள் சிலர், கட்சி தொடர்பான தகவல்களை முறையாக கூறுவதில்லை என்றும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் இருந்து வரும் முன்னாள் நிர்வாகிகளை, தற்போது உள்ள பிரமுகர்கள் மதிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கோஷ்டி மோதலாக உருவானது.

இதனால் கட்சியினர் ஒருவரையொருவர் தாக்க முயன்றனர். மேலும் கூட்டத்திற்காக போடப்பட்டிருந்த நாற்காலிகளை தூக்கி வீசி, மோதலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற மானாமதுரை போலீசார் மோதலில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியினரை விலக்கிவிட்டனர். இதனைத்தொடர்ந்து மோதல் போக்கை கைவிட்டனர்.

பின்னர் முன்னாள் நிர்வாகிகள் அங்கு இருந்து வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து மீண்டும் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட செயலாளர் கண்ணன் கூறும்போது, ‘சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் என்பதால் அவர்கள் சொல்ல வேண்டிய தேவையில்லை. அவர்கள் இதில் தேவையின்றி பங்கேற்றனர். இதனாலேயே மோதல் ஏற்பட்டது’ என்றார்.

முன்னாள் நிர்வாகிகள் கூறுகையில் ‘தற்போது கட்சியில் உள்ள நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுகுறித்து கேட்டால் தகராறு செய்கின்றனர்’ என்றார்.


Next Story