திருவாடானை பஸ் நிலையத்தில் பயணியை கொடூரமாக தாக்கும் தனியார் பஸ் ஊழியர் வைரலாக பரவும் வீடியோ காட்சி
ராமநாதபுரம் அருகே பயணச்சீட்டு வாங்காமல் பேருந்தில் பயணம் செய்ததாகக் கூறி தனியார் பேருந்து நடத்துநர் பயணியை கொடூரமாக தாக்கியுள்ளார்.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து நேற்று முன்தினம் மதியம் ஓரியூர் சென்ற தனியார் பஸ்சில் திருவாடானை செல்வதற்காக சி.கே.மங்கலம் பஸ் நிறுத்தத்தில் செலுகை கிராமத்தை சேர்ந்த அர்ச்சுனன் என்பவர் ஏறியுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் பஸ் கண்டக்டர் டிக்கெட் கேட்டுள்ளார். ஆனால் அவரிடம் பணம் ஏதும் இல்லாத நிலையில் டிக்கெட் எடுக்கவில்லையாம். இதற்குள் அந்த பஸ் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருவாடானை பஸ் நிலையத்திற்குள் சென்று நின்றுள்ளது.
அப்போது அந்த பஸ்சில் இருந்து இறங்கிய பயணியை தனியார் பஸ்சின் ஊழியர் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் அந்த நபர் மயங்கி கீழே விழுந்துள்ளார். நீண்டநேரம் மயங்கி கிடந்தவரை பயணிகள் சிலர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சி கடந்த 2 தினங்களாக வைரலாக பரவி வருகிறது. இது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திஉள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறும்போது, பஸ்சில் குடிபோதையில் டிக்கெட் எடுக்காததால் ஒருவரை பொதுஇடத்தில் இப்படி கொடூரமாக தாக்குவது மனித உரிமைகளுக்கு எதிரான செயலாகும். எனவே அந்த தனியார் பஸ் ஊழியர் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.