‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.4½ கோடி மதிப்பில் 9 திடக்கழிவு மேலாண்மை மையங்கள் - அதிகாரிகள் தகவல்


‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.4½ கோடி மதிப்பில் 9 திடக்கழிவு மேலாண்மை மையங்கள் - அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 29 July 2018 5:00 AM IST (Updated: 29 July 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வேலூர் மாநகராட்சியில் ரூ.4½ கோடி மதிப்பில் 9 திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்கான பணிகள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) தொடங்கப்பட உள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்,

வேலூர் மாநகரம், ‘ஸ்மார்ட் சிட்டி’ மற்றும் ‘மாடல் சிட்டி’ திட்டங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. இத்திட்டங்கள் மூலம் வேலூர் மாநகரை பல்வேறு வசதிகளுடன் கூடிய சீர்மிகு நகராக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றன.

வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி பகுதிகளில் ஒரு நாளைக்கு சுமார் 200 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அவை அனைத்தும் வேலூரை அடுத்த சதுப்பேரியில் கொட்டப்பட்டு வந்தன. இதனால் அந்தப்பகுதியில் நிலத்தடிநீர் மாசுபடுவதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் கூறி அங்கு குப்பைகள் கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சதுப்பேரியில் குப்பைகள் கொட்ட பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. அதைத்தொடர்ந்து அங்கு குப்பைகள் கொட்டுவது நிறுத்தப்பட்டது.

அதற்கு மாற்று ஏற்பாடாக ஏற்கனவே 4 மண்டலங்களிலும் செயல்படுத்தப்பட்ட திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து மக்கும் குப்பைகளை கொண்டு மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் அரியலூரில் உள்ள சிமெண்டு தயாரிக்கும் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 42 இடங்களில் திடக்கழிவு மேலாண்மை மையங்கள் உள்ளது. வேலூர் மாநகராட்சியை குப்பைத் தொட்டி இல்லாத மாநகராட்சியாக மாற்றும் திட்டம், சாலையோரங்களில் குப்பைக் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுப்பது போன்ற காரணங்களால் மாநகராட்சி பகுதியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி மதிப்பில் கூடுதலாக 10 திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இதுதொடர்பான திட்ட அறிக்கை ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ நிர்வாகம் 9 திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்க அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

வேலூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் 9 திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. ஒரு திடக்கழிவு மேலாண்மை மையம் ரூ.50 லட்சம் என 9 திடக்கழிவு மேலாண்மை மையங்கள் ரூ.4½ கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது. 4-வது மண்டலத்தில் 15 திடக்கழிவு மேலாண்மை மையங்கள் உள்ளன. எனவே மீதமுள்ள 3 மண்டலங்களிலும் கூடுதலாக திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, முதலாவது மண்டலத்தில் 3 திடக்கழிவு மேலாண்மை மையங்களும், 2-வது மண்டலத்தில் 4 திடக்கழிவு மேலாண்மை மையங்களும், 3-வது மண்டலத்தில் 2 திடக்கழிவு மேலாண்மை மையங்களும் அமைக்கப்படுகிறது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) திடக்கழிவு மேலாண்மை மையங்கள் கட்டும் பணி தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story