முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யின் தோட்டத்து காவலாளி கைது; துப்பாக்கி பறிமுதல்


முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யின் தோட்டத்து காவலாளி கைது; துப்பாக்கி பறிமுதல்
x
தினத்தந்தி 29 July 2018 4:30 AM IST (Updated: 29 July 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யின் தோட்டத்து காவலாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பத்மநாபபுரம்,

குமரி மாவட்டம் தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ஓமனாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ரப்பர் தோட்டத்தையொட்டி பகுதியில் ஒருவர் துப்பாக்கியுடன் நடந்து சென்றார். போலீசாரை கண்டதும் அந்த நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் துரத்திச் சென்றனர்.

அந்த நபர், அங்கிருந்த தோட்டத்துக்குள் பதுங்கினார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர், திருவனந்தபுரம் குள்ளநாடு பகுதியை சேர்ந்த ஜான் என்கிற ஜானி (வயது 50) என்பதும், இவர், அங்குள்ள ரப்பர் தோட்டத்தில் தங்கி இருந்து காவலாளியாக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும் அந்த தோட்டம் கேரளாவை சேர்ந்த போலீஸ் முன்னாள் டி.ஜி.பி. ஒருவருக்கு சொந்தமான ரப்பர் தோட்டம் என்பதும் தெரிய வந்தது. பின்னர் ஜானி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், துப்பாக்கி வைத்திருப்பதற்காக எந்தவொரு அனுமதி சான்றும் அவரிடம் இல்லை.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானியை கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கைதான ஜானிக்கு துப்பாக்கி எங்கு இருந்து வந்தது? அவர் எதற்காக துப்பாக்கி வைத்திருந்தார். அனுமதி சான்று இல்லாமல் துப்பாக்கியை பயன்படுத்தியது எப்படி? என்பது குறித்து போலீசார் பல்வேறு கேள்விகளை ஜானியிடம் எழுப்பி உள்ளனர். போலீசாரின் கேள்விகளுக்கு அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

தோட்ட காவலாளிக்கு முன்னாள் டி.ஜி.பி. துப்பாக்கி வாங்கி கொடுத்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தக்கலை அருகே தோட்ட காவலாளியிடம் துப்பாக்கி சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story