தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தம் பெலகாவியில் பச்சிளம் குழந்தை சாவு


தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தம் பெலகாவியில் பச்சிளம் குழந்தை சாவு
x
தினத்தந்தி 29 July 2018 4:02 AM IST (Updated: 29 July 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பெலகாவியில் பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது.

பெங்களூரு,

மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பரிதவித்த சம்பவங்களும் அரங்கேறின.

தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு இந்திய மருத்துவ சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய அரசுடன் இந்திய மருத்துவ சங்கத்தினர் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நேற்று தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.

அதாவது காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணிவரை தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை, அவசரமில்லா அறுவை சிகிச்சை பணிகளில் டாக்டர்கள் ஈடுபடமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவசர சிகிச்சைகள், உள்நோயாளிகள் சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கர்நாடகத்திலும் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.

தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சிகிச்சை பெற சுகாதாரத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன. இதற்காக அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், பிற ஊழியர்கள் நேற்று கண்டிப்பாக வேலை செய்ய வேண்டும் என்றும், யாருக்கும் விடுமுறை கிடையாது என்றும் சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனால் விடுமுறையில் சென்றிருந்த அரசு ஆஸ்பத்திரிகளின் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் நேற்று பணிக்கு வந்திருந்தார்கள்.

இந்த நிலையில், டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் மாநிலத்தில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவமனைகளில் நேற்று புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டது. இதுதவிர பெரும்பாலான நர்சிங் ஹோம்கள் நேற்று காலையில் இருந்து மாலை வரை திறக்கப்படவில்லை. அதே நேரத்தில் தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

பெங்களூருவை பொறுத்தவரையில் சில முக்கியமான தனியார் மருத்துவமனைகள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் வழக்கம் போல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தன. ஆனாலும் ஏராளமான தனியார் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டு இருந்தது. இதுபோல, கொப்பல், தாவணகெரே, துமகூரு, கார்வார், பெலகாவி, தார்வார், உடுப்பி உள்பட மாநிலம் முழுவதும் நேற்று காலையில் இருந்து மாலை வரை தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காததால், சிகிச்சை பெற வந்த நோயாளிகள் ஏமாற்றத்துடன் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு திரும்பிச் சென்றதை காண முடிந்தது.

குறிப்பாக கிராமப்புறங்களை சேர்ந்த நோயாளிகள், டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பது பற்றி அறியாமல் நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வந்தார்கள். அங்கு சிகிச்சை பெற முடியாமல் கிராமப்புற நோயாளிகள் பரிதவித்தார்கள். அவ்வாறு பரிதவித்த நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர். ஆனாலும் நோயாளிகள் அங்கும், இங்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், பெலகாவி மாவட்டம் கோகாக் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பசப்பா என்பவரின் மனைவிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த டாக்டர்கள் பெலகாவி டவுனில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை உடனடியாக கொண்டு செல்லும்படி டாக்டர்கள் கூறினார்கள். இதையடுத்து, கோகாக்கில் இருந்து பெலகாவிக்கு பசப்பா தனது குழந்தையை ஆம்புலன்சில் கொண்டு சென்றார்.

டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் பெலகாவி டவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது. குழந்தையின் உடலை பார்த்து பசப்பா, அவரது மனைவி கதறி அழுதார்கள். பெலகாவி டவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு டாக்டர்கள் சரியான நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால், குழந்தை உயிர் பிழைத்திருக்கும் என்று பசப்பா குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறினார்கள்.

இதுபோல், பாகல்கோட்டை (மாவட்டம்) புறநகரை சேர்ந்த விவசாயியான சித்தப்பா என்பவரை பாம்பு கடித்தது. இதனால் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலில் சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் நீண்ட நேரம் கழித்து சித்தப்பாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதே நேரத்தில் பாகல்கோட்டை மாவட்டம் பேலூர் கிராமத்தை சேர்ந்த சாவித்திரி பிரசவத்திற்காக நேற்று முன்தினம் மாலையில் ஆட்டோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவருக்கு ஆட்டோவிலேயே குழந்தை பிறந்தது.

பாகல்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சாவித்திரி, அவரது குழந்தையை குடும்பத்தினர் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள், நர்சுகள் இல்லாததால் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று மதியம் வரை சாவித்திரியும், குழந்தையும் உரிய சிகிச்சை பெற முடியாமல் தவித்த சம்பவமும் நடந்தது. டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் மைசூரு, கலபுரகி ஆகிய மாவட்டங்களில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. நேற்று மாலை 6 மணிக்கு பிறகு மாநிலம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


Next Story