கடலூரில் வேளாண்மை அதிகாரி வீட்டில் ரூ.4 லட்சம் நகை கொள்ளை

கடலூரில் வேளாண்மை அதிகாரி வீட்டில் ரூ.4 லட்சம் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர்,
கடலூர் பாதிரிக்குப்பம் அன்புநகரை சேர்ந்தவர் ஞானமூர்த்தி (வயது 54). இவர் விருத்தாசலம் வேளாண்மை பொறியியல் துறையில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அன்னபூரணி. இவர் சுந்தரவாண்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் 2 பேரும் கடந்த 26–ந்தேதி மாலை 4 மணி அளவில் சென்னையில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றனர். அவர்கள் துக்க நிகழ்ச்சியை முடித்து விட்டு நேற்று மாலை 3 மணி அளவில் மீண்டும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் வெளிப்புற கதவு பூட்டும், உள்பக்கம் உள்ள கதவு பூட்டும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஞானமூர்த்தியும், அன்னபூரணியும் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
அங்கே வீட்டில் உள்ள பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவை பார்த்த போது, அவர்கள் வைத்திருந்த தங்க நாணயங்கள் உள்ளிட்ட நகைகளை காணவில்லை. அவர்கள் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவு பூட்டுகளை உடைத்து, உள்ளே புகுந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது பற்றி ஞானமூர்த்தி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்–இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் வீட்டில் இருந்த முக்கிய தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையில் மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விபிடிக்கவில்லை.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்த போது, ஞானமூர்த்தியின் வீட்டில் 20 பவுன் நகைகள் தான் கொள்ளை போய் உள்ளது. இதன் மதிப்பு ரூ. 4 லட்சம் இருக்கும் என்று தெரிவித்தனர்.
ஆனால் ஞானமூர்த்தி தனது வீட்டில் அதிகளவில் நகைகள் கொள்ளை போய் உள்ளது என்று தெரிவித்து வந்தார். இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.