மத்திய அரசை கண்டித்து தனியார் மருத்துவமனை டாக்டர்கள் போராட்டம்
மத்திய அரசை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டம் நடத்தியதால் நோயாளிகள் அவதியடைந்தனர்.
கடலூர்,
மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை புறக்கணித்து போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று கடலூர் மாட்டத்தில் உள்ள சுமார் 250–க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் புறநோயாளிகள் சிகிச்சை பகுதியை புறக்கணித்தனர்.
இதனால் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு வந்த நோயாளிகள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் சிலர் அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.
இந்த நிலையில் இந்திய மருத்துவர் சங்கத்தின் கடலூர் மாவட்ட கிளை தலைவர் டாக்டர் ராஜேந்திரன் தலைமையில், துணை தலைவர் டாக்டர் கேசவன், செயலாளர் டாக்டர் கண்ணன் மற்றும் டாக்டர்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
பின்னர் டாக்டர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:–
மத்திய அரசு பல ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருந்த இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் எதிரான தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை ஏற்படுத்துவதை கண்டித்து கடந்த ஓராண்டாக இந்திய மருத்துவர் சங்கம் பல்வேறு கட்ட அறப்போராட்டங்களை நடத்தியது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் டெல்லியில் ஒன்று கூடி போராட்டம் நடத்தினோம்.
அதன் தொடர்ச்சியாக இன்று(நேற்று) இந்தியா முழுவதும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை புறக்கணித்து போராட்டம் நடத்துகிறோம். தேசிய மருத்துவ ஆணையத்தை பொறுத்தவரை 20 சதவீத உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆவர். மீதமுள்ள 80 சதவீதம் பேர் நியமன உறுப்பினர்கள் என்பதால் மருத்துவ ஆணையம் சுயமாக செயல்பட முடியாது. இதை கண்டித்துதான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். எங்களது கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இல்லை என்றால் இந்திய மருத்துவர் சங்கத்தின் உத்தரவின் பேரில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.