கீழணையில் இருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 2,200 கனஅடி நீர் வரத்து: வீராணம் ஏரி ஒரு வாரத்தில் நிரம்பும்


கீழணையில் இருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 2,200 கனஅடி நீர் வரத்து: வீராணம் ஏரி ஒரு வாரத்தில் நிரம்பும்
x
தினத்தந்தி 29 July 2018 4:15 AM IST (Updated: 29 July 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

கீழணையில் இருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 2,200 கனஅடி நீர் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதனால் ஒரு வாரத்தில் ஏரி அதன் முழுகொள்ளளவை எட்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.

காட்டுமன்னார்கோவில்,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ள இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் செங்கால்ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வருகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். மேலும் வீராணம் ஏரியில் உள்ள 34 மதகுகள் வழியாக 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. ஏரி வெட்டப்பட்ட காலத்தில் 1.44 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டது. தற்போது ஏரி தூர்ந்து போய் அதன் கொள்ளளவு வெறும் 0.96 டி.எம்.சி.யாக உள்ளது. வீராணம் ஏரி தூர்ந்து கிடப்பதால், கூடுதலாக தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததாலும், ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வராததாலும் வீராணம் ஏரி வறண்டது.

இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 22-ந் தேதி கல்லணையை வந்தடைந்தது. அங்கிருந்து பாசனத்துக்காக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 26-ந் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழணையை வந்து சேர்ந்தது. கீழணையின் மொத்த நீர்மட்டமான 9 அடியை வேகமாக எட்டியது. இதையடுத்து கீழணையின் பாதுகாப்பு கருதி வடவாறு வழியாக கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 500 கன அடி நீர் வீதமும், கொள்ளிடம் ஆற்றில் 10 ஆயிரம் கன அடிநீர் உபரி நீராகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்துவிட்டனர்.

இந்த தண்ணீர் நேற்று முன்தினம் காலை வீராணம் ஏரியை வந்தடைந்தது. இந்நிலையில் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி நேற்று மாலை வரை வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் வடவாற்றின் இரு கரைகளையும் தொட்டபடி காவிரிநீர் கரைபுரண்டு ஓடி வருகிறது. தற்போது வீராணம் ஏரிக்கு குறைந்த அளவே தண்ணீர் வந்துள்ளதால் வீராணம் ஏரி ஓடை போல் காணப்படுகிறது. 2 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால், வீராணம் ஏரி இன்னும் ஒரு வாரத்தில் அதன் முழு கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story