நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்காவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும், பா.ஜ.க. எச்சரிக்கை
நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்காவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பா.ஜ.க. எச்சரித்துள்ளது.
புதுச்சேரி,
பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
முதல்–அமைச்சர் நாராயணசாமி புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு பிரதமரையும், ஜனாதிபதியையும் சந்திக்க செல்வதாக அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களையும் அழைத்துக் கொண்டு டெல்லி சென்று மக்களை திசை திருப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியது ஜனாதிபதியும், பிரதமரும் தான். ஆனால் அவர்கள் இருவரையும் சந்திக்காமல் மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்துள்ளனர்.
முதல்–அமைச்சரின் டெல்லி பயண நோக்கம் தோல்வி அடைந்துள்ளது. மாநில அந்தஸ்து கேட்டு சட்டசபையில் இதுவரை 13 முறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மத்தியில் 50 ஆண்டுகாலம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்றுள்ளது. முதல்–அமைச்சர் நாராயணசாமி நிழல் பிரதமராக இருந்துள்ளார். கட்சியின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். அப்போது அவர் நினைத்திருந்தால் புதுவைக்கு மாநில அந்தஸ்து வாங்கி கொடுத்திருக்கலாம்.
புதுவைக்கு தனி கணக்கு தொடங்க செய்தது யார்? மத்திய அரசு வழங்கி வந்த 70 சதவீத மானியத்தை 30 சதவீதமாக குறைத்தது யார்? இதனால் தான் தற்போது புதுச்சேரிக்கு ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. இதற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளிக்க வேண்டும். மாநில அந்தஸ்து விவகாரத்தில் மக்களிடம் ஆய்வு மற்றும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
புதுச்சேரியில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் முடங்கி உள்ளது. இதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து கவர்னரை விமர்சனம் செய்து வருகிறார்.
பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் போது அரசு சார்பு நிறுவனமான பாண்லேயில் பல கோடி ரூபாய் பழைய நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர். குயில்தோப்பு இட மோசடியில் காங்கிரசார் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக கவர்னரிடம் புகார் செய்வோம்.
நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததும், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததும் காங்கிரஸ் கட்சி தான். ஆனால் தற்போது அவர்கள் கோர்ட்டு உத்தரவை ஏற்க மறுக்கின்றனர். சட்டசபை கூட்டம் எப்போது நடைபெற்றாலும் நாங்கள் சட்டசபைக்கு செல்வோம். சபாநாயகர் வைத்திலிங்கம் இந்த முறை சபைக்குள் அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். இல்லாத பட்சத்தில் சபாநாயகரும், புதுவை அரசும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.