ஆயுதங்களுடன் கூலிப்படை தலைவன் உள்பட 3 பேர் கைது


ஆயுதங்களுடன் கூலிப்படை தலைவன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 July 2018 4:30 AM IST (Updated: 29 July 2018 11:57 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே ஆயுதங்களுடன் கூலிப்படை தலைவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்படி ராமேசுவரம்–ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரைசாலை, மதுரை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போலீசார் ரோந்து சென்று வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர். மேலும் கடற்கரை பகுதிகளில் கடலோர போலீசார் இரவு நேரங்களில் ரோந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து கோப்பேறிமடம் செல்லும் சாலையில் தேவிபட்டினம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேம்சாந்த், சப்–இன்ஸ்பெக்டர் நாகராஜபிரபு மற்றும் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கோப்பேறிமடம்– சித்தார்கோட்டை சாலையில் அதிவேகத்தில் கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டபோது காரின் பின் பகுதியில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதையடுத்து காரில் இருந்த 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அதில் இருந்த ஒருவன் போலீசாரிடம் கத்தியை காட்டி நான் ரவுடி உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளான். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் பிடித்து வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அதில் ஒருவன் தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகொறச்சி கிராமத்தைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் பட்டுராஜா(வயது 36) என தெரிய வந்தது. ஏற்கனவே அவன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மற்ற 2 பேர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் விக்கி என்ற விக்னேஷ்(25), நயினார்கோவில் அருகே நகரம் கிராமத்தைச் சேர்ந்த மாரி மகன் குட்டி என்ற செல்வமணி(33) என தெரிய வந்தது. அவர்கள் வந்த காரும், பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் 3 பேரும் எதற்காக இந்த பகுதிக்கு வந்தனர் என போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story