திருப்பத்தூர் பகுதியில் விதிமீறல்: தனியார் பட்டா நிலங்களில் அதிகரிக்கும் மணல் திருட்டு
திருப்பத்தூர் பகுதியில் தனியார் பட்டா நிலங்களில் விதிமீறி தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்து வரும் பகுதியாக திருப்பத்தூர் விளங்குகிறது. இங்கு விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்களே பிரதானமாக உள்ளது. இந்தநிலையில் சமீப காலமாக திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகள் மற்றும் ஆற்றுப்பகுதியில் அருகில் உள்ள பட்டா நிலங்களில் தொடர்ந்து மணல் திருடப்பட்டு வருகிறது. மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து திருட்டு மணல் கொண்டு வந்து இப்பகுதியில் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆறு, கண்மாய் ஓரங்களில் உள்ள பட்டா நிலங்களில் விதிமீறி 10 முதல் 15 அடி ஆழத்திற்கு தோண்டி மணல் திருடப்பட்டு வருகிறது. இந்த மணல் திருட்டால் ஆறு, கண்மாய் கரையில் உள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் திருப்பத்தூர் தாசில்தார் தங்கமணிக்கு, திருப்பத்தூர்–திருககோஷ்டியூர் ரோட்டில் உள்ள தனியார் பட்டா நிலத்தில் மணல் திருடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நள்ளிரவில் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது திருப்பத்தூர் அருகே தானிப்பட்டி ஆற்றுப்பகுதியில் உள்ள தேவரம்பூரைச் சேர்ந்த வெள்ளககண்ணு என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் மணல் திருடுவது தெரியவந்தது. அப்போது அதிகாரிகளை கண்டதும், மணல் திருடர்கள் ஜே.சி.பி. எந்திரத்தை மட்டும் விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். பின்னர் அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்து திருககோஷ்டியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் நிலத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிகக வலியுறுத்தி புகார் கொடுத்துள்ளனர். மணல் திருடிய நிலத்தின் ஒரு பகுதியில் சுமார் 25 அடி ஆழத்திற்கும், 30 அடி நீளத்திற்கும் ஜே.சி.பி. எந்திரங்களை கொண்டு தோண்டி மணல் திருடியது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் கூறுகையில், திருப்பத்தூர் பகுதியில் அரசு அனுமதியின்றி ஆற்றில் மணலை திருடி வருகின்றனர். இதனால் இப்பகுதிகளில் நீர்வளம் குறைந்து வருகிறது. மேலும் மணல் திருடர்கள் சிலர், வெளிமாவட்டங்களில் உள்ள டிப்பர் லாரிகள் மற்றும் ஜே.சி.பி. எந்திரங்களை கொண்டு வந்து மணல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முன்னாள் அரசு அலுவலர் ஒருவர் தலைமையில் இந்த மணல் திருடர்கள் செயல்பட்டு வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது அரசு உரிய நடவடிககை எடுப்பதுடன், பட்டா நிலங்களில் மணல் திருடினால் அந்த நிலத்தின் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்றார்.