பெரம்பலூரில் 1 மணி நேரம் பலத்த மழை பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி


பெரம்பலூரில் 1 மணி நேரம் பலத்த மழை பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 30 July 2018 4:30 AM IST (Updated: 30 July 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் நேற்று மதியம் 1 மணி நேரம் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் ஓரளவு காணப்பட்டது. ஆனால் மதியம் 2.30 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. இதனை தொடர்ந்து திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து பலத்த மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடின. ஆங்காங்கே பள்ளமான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கின. சாலையில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றனர்.

இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் திடீரென பெய்த மழையால் நனைந்தபடியே சென்றதை காணமுடிந்தது. சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள் மழை பெய்ததால் ஒதுங்குவதற்கு இடங்களை தேடி ஓட்டம் பிடித்தனர். பலத்த மழையால் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் நிறைய பேர் மழைக்காக அந்த பகுதியில் உள்ள பாலத்தின் அடியில் ஒதுங்கி நின்றனர். சில மாதங்களுக்கு பிறகு பெரம்பலூரில் பலத்த மழை பெய்ததால் சிலர் மழையில் உற்சாக குளியல் போட்டனர். சிலர் தற்போது நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் மழைநீரை பாத்திரங்களில் பிடித்து வீட்டில் சேமித்து வைத்தனர்.

கழிவுநீர் வாய்க்கால்களில் குப்பைகளை மழைநீர் அடித்து சென்றது. இதனால் துர்நாற்றம் வீசியது. சாலை, தெருவோரங்களில் கழிவுநீருடன் மழைநீர் சேர்ந்து வெள்ளம் போல் ஓடின. மேலும் திடீரென்று பெய்த மழையால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மழையில் நனைந்து மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மதியம் 2.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்தது. நேற்று பெய்த மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதே போல் நேற்று முன்தினம் மாலை சிறிது நேரம் பெய்த மழையால் பெரம்பலூரில் 5 மில்லி மீட்டர் அளவு மழை பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இதே போல் மழை பெய்தது.

Next Story