மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை, உருக்கமான கடிதம் சிக்கியது
புதுவையில் மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்து இருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.
புதுச்சேரி,
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் சபேசன். இவர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகனும், மகளும் இருந்தனர்.
மகன் மணிசுந்தரத்தை புதுவை காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சபேசன் சேர்த்துள்ளார். லாஸ்பேட்டை ராஜாஜி நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து மணிசுந்தரம் கல்லூரிக்கு சென்று வந்தார். அவரது தந்தை சபேசனும் உடன் இருந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மகளை பார்ப்பதற்காக சபேசன் பெங்களூரு சென்று விட்டு நேற்று புதுவை திரும்பினார். அப்போது வீட்டில் மணிசுந்தரம் தூக்குப்போட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் பார்த்தபோது மணிசுந்தரம் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர், தனக்கு எம்.பி.பி.எஸ். படிக்க விருப்பமில்லை. தனிமையில் தவிக்கிறேன். இதனால் தற்கொலை செய்துகொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். படிக்க விரும்பாத நிலையில் விரக்தியில் மணிசுந்தரம் தற்கொலை செய்து இருக்க வேண்டும் என்று தெரிகிறது.
இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.