ஆற்றில் தண்ணீர் வராததால் கடைமடை பகுதி விவசாயிகள் ஏமாற்றம்


ஆற்றில் தண்ணீர் வராததால் கடைமடை பகுதி விவசாயிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 30 July 2018 4:00 AM IST (Updated: 30 July 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

ஆற்றில் தண்ணீர் வராததால் கடைமடை பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சாகுபடி பணிகளை தொடங்க முடியாமல் கடைமடை பகுதி விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பா சாகுபடி நடைபெறவில்லை. இந்த ஆண்டு மேட்டூர் அணை வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் சம்பா சாகுபடியை மேற்கொள்வதற்கு கடைமடை பகுதி விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.

ஆனால் மேட்டூர் அணையில் இருந்து கடந்த 19-ந் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகளில் உள்ள ஆறுகளை சென்றடையவில்லை. 11 நாட்களுக்கு பின்னரும் தண்ணீர் வராததால் கடைமடை பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். தண்ணீர் வராததால் நெல் சாகுபடி பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்காட்டுப்பள்ளி அருகே கல்விராயன்பேட்டையில் கல்லணை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகியது. இதன் காரணமாக தண்ணீர் கடைமடையை வந்தடைய தாமதம் ஆவதால், இந்த ஆண்டும் கடைமடை பகுதியில் சம்பா சாகுபடி நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள். இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லணையில் இருந்து கடைமடை பாசனத்துக்கு முழு கொள்ளளவு தண்ணீர் எடுக்கும் அளவுக்கு நீர் இருப்பு இல்லை. குறைந்த அளவே தண்ணீர் வழங்கப்பட்டதால், ஆறுகளின் கரைகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. 3 ஆயிரம் கன அடி கல்லணையில் தண்ணீர் திறந்தவுடன் கல்லணை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, கல்லணையை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

கல்லணை கடைமடை பகுதி ஆறுகளின் கரைகளை பலப்படுத்தி கட்டுமான பணிகளை ரூ.2,300 கோடியில் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணிகள் நடைபெறவில்லை. ஆற்றின் கரைகளை பலப்படுத்தி கட்டுமான பணிகளை முடித்தால்தான் கடைமடை வரை முழு கொள்ளளவுடன் தண்ணீர் எடுத்து செல்ல முடியும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் பாலசுந்தரம் கூறியதாவது:- காவிரி ஆற்றில் வரும் உபரி தண்ணீர் அனைத்தும், கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டு கடலில் வீணாக கலக்கிறது. காவிரி நீருக்காக பல்வேறு சட்ட போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில், இயற்கையின் கருணையினால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கடைமடை பாசன பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால், நெல் சாகுபடி பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். இனியும் தாமதிக்காமல் கடைமடை பாசன பகுதி வாய்க்கால்களில் போதிய அளவு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story