தஞ்சையில் 3 அரசு பஸ்கள் மீது கல்வீச்சு 4 மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


தஞ்சையில் 3 அரசு பஸ்கள் மீது கல்வீச்சு 4 மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 31 July 2018 4:30 AM IST (Updated: 30 July 2018 10:03 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், 3 அரசு பஸ்கள் மீது கல்வீசிய 4 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் பரவியது.

இதையடுத்து தஞ்சையில் அரசு பஸ்கள் கண்ணாடி உடைக்கப்பட்டன. தஞ்சை பழைய பஸ் நிலையம், கொடிமரத்து மூலை, மருத்துவக்கல்லூரி ஆகிய இடங்களில் அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.


கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருபவர் சுப்பிரமணியன். இவர் நேற்று முன்தினம் சேலம் எடப்பாடியில் இருந்து மயிலாடுதுறைக்கு அரசு பஸ்சை ஓட்டி வந்தார். அந்த பஸ் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் தஞ்சை கொடிமரத்து மூலை அருகே வந்தபோது அங்குள்ள பாலத்தின் மீது அமர்ந்திருந்த 2 பேர் திடீரென அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கற்களை வீசினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது குறித்து டிரைவர் சுப்பிரமணியன் தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் மீது கல்வீசிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


இதே போல் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி ஒரு அரசு பஸ் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே வந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கற்களை வீசி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது குறித்து பஸ் டிரைவர் கார்த்திக், தஞ்சை கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதேபோல் தஞ்சை மருத்துவகல்லூரிக்கு சென்ற அரசு பஸ்சின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story