கவர்னரை வெளியேற்றாத வரை புதுச்சேரியில் ஜனநாயகத்துக்கு பாதுகாப்பில்லை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாக்கு


கவர்னரை வெளியேற்றாத வரை புதுச்சேரியில் ஜனநாயகத்துக்கு பாதுகாப்பில்லை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாக்கு
x
தினத்தந்தி 31 July 2018 4:30 AM IST (Updated: 31 July 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

கவர்னரை இங்கிருந்து வெளியேற்றாத வரை புதுச்சேரியில் ஜனநாயகத்துக்கு பாதுகாப்பில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பாரதீய ஜனதா கட்சியை வளர்ப்பதற்காகவே புதுச்சேரி கவர்னராக வந்தேன் என்பதை கவர்னர் கிரண்பெடி தன்னுடைய நடவடிக்கைள் மூலம் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். பதவி ஏற்றவுடன் அரசுக்கு எதிராக தன்னிச்சையாக அதிகாரிகளை கூட்டி உத்தரவுகளை பிறப்பித்ததில் இருந்து புதுச்சேரி அரசுக்கு எதிராக தனிக்கட்சி ஒன்றை நடத்தி வருகிறார்.

நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் இதுவரை ஆளுங்கட்சி கருத்திற்கேற்ப நியமனம் செய்த நடைமுறையை மீறி பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்துள்ளனர். நியமன எம்.எல்.ஏ. விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும்போதே அவர்களை சட்டசபையில் அங்கீகரிக்க வேண்டும் என அதிகார தோரணையில் மிரட்டல் உத்தரவை பிறப்பிக்கிறார்.

விவசாயம் சீரழிந்துள்ளது குறித்தோ, மூடிய தொழிற்சாலைகளை பற்றியோ, வேலைவாய்ப்பு, குப்பை வரி போட்டது, மின்கட்டணம் உயர்வு போன்ற மக்கள் பிரச்சினைக்காக வாய் திறக்காத கிரண்பெடி பாரதீய ஜனதா தலைவர்களை எம்.எல்.ஏ.வாக ஆக்குவதில் மட்டும் மிகுந்த அவசரம் காட்டுகிறார். அப்பட்டமாக பாரதீய ஜனதா கட்சியை வளர்க்கும் கட்சி தலைவரைப்போல் செயல்படுகிறார்.

கிரண்பெடி விடுக்கும் சவால் இந்த அரசுக்கு மட்டுமல்ல, புதுச்சேரி மக்களுக்கு விடும் சவாலாகும். ஜனநாயக நடைமுறைகளை அத்துமீறி அடாவடி நடவடிக்கையில் இறங்கியுள்ள கவர்னரை இங்கிருந்து வெளியேற்றாமல் புதுச்சேரியில் ஜனநாயகத்துக்கு பாதுகாப்பில்லை. இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் ராஜாங்கம் கூறியுள்ளார்.


Next Story