மாநில அளவிலான பணித்திறன்போட்டியில் தங்கம் வென்று துப்பறியும் நாய் ரோமியோ சாதனை


மாநில அளவிலான பணித்திறன்போட்டியில் தங்கம் வென்று துப்பறியும் நாய் ரோமியோ சாதனை
x
தினத்தந்தி 31 July 2018 3:30 AM IST (Updated: 31 July 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

மாநில அளவிலான பணித்திறன்போட்டியில் தங்கம் வென்று துப்பறியும் நாய் ரோமியோ சாதனை படைத்துள்ளது.

ராமநாதபுரம்,

சென்னை போலீஸ் உயர் பயிற்சியகத்தில் கடந்த 22–ந்தேதி முதல் 27–ந்தேதி வரை காவலர் பணித்திறன் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் தங்களின் பணித்திறன்களை வெளிப்படுத்தினர். காவலர்களின் பணித்திறனை கண்டறியும் வகையில் அறிவியல் பூர்வமான புலனாய்வு திறன் போட்டிகள், புகைப்படம் மற்றும் வீடியோ திறன் போட்டிகள், நாசவேலை தடுப்பு பிரிவு, வெடிகுண்டு கண்டுபிடிக்கும் தனிப்பிரிவு, மோப்பநாய் பிரிவு, தடய அறிவியல் பிரிவு, கைரேகை பிரிவு, தடயங்கள் சேகரிக்கும் பிரிவு போன்ற பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த போட்டிகளில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த ராமநாதபுரம் சரகத்திற்குட்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 24 பேரும், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 23 பேரும் என மொத்தம் 47 பேர் கலந்து கொண்டனர்.

இதில் நாய்களுக்கான துப்பறிவு மற்றும் வெடிபொருட்கள் கண்டறியும் போட்டியில் ராமநாதபுரம் போலீஸ் பிரிவை சேர்ந்த துப்பறியும் நாய் ரோமியோ குற்றப்புலனாய்வில் குற்றவாளிகள் கண்காணிப்பு தேடுதல் பிரிவில் அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. மாநில அளவில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் ராமநாதபுரம் போலீஸ் பிரிவை சேர்ந்த நாய் ரோமியோ அனைத்து சவால்களையும் திறமையுடன் எதிர்கொண்டு குற்றவாளிகள் சென்ற தடங்களை மோப்பம் பிடித்து சென்று வெற்றி இலக்கை அடைந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டி சென்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக மதுரையை சேர்ந்த ராக்கி என்ற நாய் 2–வது பரிசையும், ராமநாதபுரம் சரகத்திற்கு உட்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நாய் லைக்கா 3–வது பரிசையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முதலிடம் பிடித்த நாய் ரோமியோ, 3–வது இடம் பிடித்த நாய் லைக்காவையும், அதன் பயிற்சியாளர்கள் தில்லைமுத்து, வீரமணி, குழு மேலாளர் இன்ஸ்பெக்டர் இளவேனில் ஆகியோரை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் பாராட்டினார்.


Next Story