பந்தலூர் அருகே குப்பை லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


பந்தலூர் அருகே குப்பை லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 31 July 2018 3:45 AM IST (Updated: 31 July 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே குப்பை லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பந்தலூர்,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ளது ஏலமன்னா. இந்த பகுதியில் நெல்லியாளம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு இருக்கிறது. இங்கு தேவாலா, நாடுகாணி, உப்பட்டி, அத்திக்குன்னா, மரப்பாலம், நெல்லியாளம் உள்பட பல்வேறு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. மேலும் அந்த குப்பை கிடங்கில் இறைச்சி கழிவுகளும் மூட்டை மூட்டையாக கொண்டு வரப்பட்டு புதைக்காமல் அப்படியே கொட்டப்படுகிறது. இதன் காரணமாக நாளுக்கு நாள் அந்த பகுதியில் கொசு மற்றும் ஈக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். சமைக்கும் உணவுகளில் ஈக்கள் மொய்ப்பதால், பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுகிறது.

இதுகுறித்து நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், நேற்று குப்பை கிடங்கிற்கு வந்த 2 லாரிகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர் பாலகுமார், பந்தலூர் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குப்பை கிடங்கில் இறைச்சி கழிவுகளை புதைத்து வைக்கவும், கொசு மற்றும் ஈக்கள் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story