பெரும்பாக்கத்தில் பெயிண்டர் ஓட, ஓட விரட்டி கொலை; மர்ம கும்பலுக்கு வலைவீச்சு


பெரும்பாக்கத்தில் பெயிண்டர் ஓட, ஓட விரட்டி கொலை; மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 31 July 2018 4:30 AM IST (Updated: 31 July 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

பெரும்பாக்கத்தில் பெயிண்டர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெரும்பாக்கம், எழில் நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 26), பெயிண்டர். இவர் நேற்று இரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் திடீரென ராஜேசை கண்டதும் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்க வந்தனர்.

இதைக்கண்ட ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் குடியிருப்பு வளாகத்திலேயே ஓட, ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். உடனே மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ராஜேஷ் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதுபற்றி அப்பகுதியினர் பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தந்தனர். பள்ளிக்கரணை போலீசார் ஆம்புலன்சுடன் விரைந்து வந்தனர். ராஜேசை மருத்துவ குழுவினர் சோதித்து பார்த்துவிட்டு, அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்த ராஜேஷ் பின்னர் குடும்பத்துடன் குடிசைமாற்று வாரிய குடியிருப்புக்கு வந்தார். சூளைமேட்டில் வசித்தபோது அங்கு ஒரு வாலிபரை கொலை செய்ய முயற்சித்ததாக ராஜேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் தொடர்புடையவர்கள் தான் முன்விரோதம் காரணமாக ராஜேசை கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்தது.

இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். அந்த கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

Next Story