முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யின் தோட்டத்து காவலாளிக்கு துப்பாக்கி விற்றவர் கைது


முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யின் தோட்டத்து காவலாளிக்கு துப்பாக்கி விற்றவர் கைது
x
தினத்தந்தி 31 July 2018 4:30 AM IST (Updated: 31 July 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யின் தோட்டத்து காவலாளிக்கு துப்பாக்கி விற்றவர் கைது செய்யப்பட்டார்.

பத்மநாபபுரம்,

தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ஓமனாபுரம் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்குள்ள ரப்பர் தோட்டத்தையொட்டிய பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் சிக்கினார். விசாரணையில் அந்த நபர், திருவனந்தபுரம் குள்ளநாடு பகுதியை சேர்ந்த ஜான் என்கிற ஜானி (வயது 50) என்பதும், இவர், அங்குள்ள ரப்பர் தோட்டத்தில் தங்கி இருந்து காவலாளியாக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இந்த ரப்பர் தோட்டம் கேரள முன்னாள் டி.ஜி.பி.க்கு சொந்தமானதாகும்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவருக்கு துப்பாக்கியை விற்பனை செய்தது யார்? என்பது குறித்து தனிப்படை போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

ஜானிக்கும், பெருஞ் சிலம்பு பகுதியை சேர்ந்த லாசர் என்கிற மர வியாபாரிக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. ஜானி வேலை பார்த்த தோட்டத்தில் இருந்து 2 தேக்கு மரங்களை திருடி லாசரிடம் விற்பனை செய்துள்ளார்.

இதுதொடர்பாக கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில், மர வியாபாரி லாசர், ஜானியிடம் இருந்து ரூ.10 ஆயிரம் வாங்கி விட்டு துப்பாக்கி கொடுத்துள்ளார். இந்த தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து லாசரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், துப்பாக்கி விற்பனை செய்த விவகாரத்தில் கொற்றிகோடு பகுதியை சேர்ந்த ஜெயசீலன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். அவரை கைது செய்த பின்னர், இந்த விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் என போலீசார் தெரிவித்தனர். 

Next Story